சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீராங்கனை
கிரெனடாவில் கடந்த 22 ஆம் திகதி இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வீராங்கனை டீன்ட்ரா டாட்டின் 'களத்தைத் தடுத்தல்' (Obstructing the field) அடிப்படையில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த முறையில் ஆட்டமிழந்த முதல் மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்/வீராங்கனை என்ற தேவையற்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஆட்டமிழந்த 6வது பெண் வீராங்கனை
209 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி துடுப்பெடுத்தாடிய போது 30வது ஓவரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் விதிகளின்படி (Law 37), ஒரு துடுப்பாட்ட வீரர் 'களத்தைத் தடுத்தல்' முறையில் ஆட்டமிழக்க இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன:
விதி 37.1.2: துடுப்பைப் பிடிக்காத கையைப் பயன்படுத்தி வேண்டுமென்றே பந்தைத் தொடுவது சட்டவிரோதமானது. ஒரு வீரர் தற்காப்புக்காகவோ அல்லது ஓட்டங்களை எடுக்கும்போதோ கையைப் பயன்படுத்த முடியாது.
விதி 37.3.1: ஒரு களத்தடுப்பு வீரர் பந்தைப் பிடிப்பதையோ (Catch) அல்லது பந்தைச் சேகரிப்பதையோ துடுப்பாட்ட வீரர் வேண்டுமென்றே தடுத்தால் அவர் ஆட்டமிழந்தவராகக் கருதப்படுவார்.
இந்த விபரீத ஆட்டமிழப்பால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 14 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்த முறையில் ஆட்டமிழந்த 6வது பெண் வீராங்கனை டாட்டின் ஆவார். ஆண்கள் கிரிக்கெட்டில் இதுவரை 16 வீரர்கள் இவ்வாறு ஆட்டமிழந்துள்ளனர்.