கதவடைப்பு குறித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தின் இறுதி தீர்மானம்
எதிர்வரும் பதினெட்டாம் திகதி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்ட கதவடைப்பு தொடர்பில் வவுனியா வர்த்தகர் சங்கம் எடுத்த தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் வராது என வவுனியா வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வவுனியா வர்த்தகர் சங்கம் கதவடைப்புக்கு ஆதரவு தெரிவிக்காது எனவும் கடைகள் வழமை போன்று திறக்கப்படும் எனவும் வர்த்தகர் சங்க நிர்வாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக சபை
எனினும், சிலர் வர்த்தக சங்கம் மீளவும் ஆராய்ந்து முடிவை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் வர்த்தகர் சங்கத்தின் தலைவரிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வர்த்தகர் சங்க நிர்வாக சபை கூடி ஒரு முடிவினை எடுத்து அறிவித்துள்ளது.
அதில் எந்தவித மாற்றத்திற்கும் இனி இடம் இருக்காது. கதவடைப்புக்கு நாம் ஆதரவு தெரிவிக்க போவதில்லை. இது வர்த்தகர்களுடைய கருத்துக்களின் பிரகாரம் எடுக்கப்பட்ட முடிவுவாக காணப்படுகிறது.
ஆகவே எவர் எவ்வாறான கருத்துக்களை பரிமாறினாலும் எமது தீர்மானத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. நாம் ஆராய்ந்து இந்த தீர்மானங்களை எடுத்து வெளியிட்டுள்ளோம்” என கூறியுள்ளார்.



