டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றக் கொள்கை செல்லாது: அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர முற்படும் 39 நாடுகளைச் சேர்ந்த மக்களின் புகலிடம், பணி அனுமதி, கிரீன் கார்டு மற்றும் குடியுரிமை விண்ணப்பங்களை முடக்கி வைக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த குடியேற்றக் கொள்கை சட்டவிரோதமானது என்று அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் வொஷிங்டனில் இரண்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குடியேறி ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கப் பாதுகாப்பு மற்றும் பின்னணி சரிபார்ப்பைக் காரணம் காட்டி, ஆப்கானிஸ்தான், ஈரான், ஹைட்டி, சோமாலியா, வெனிசுலா, சிரியா உள்ளிட்ட 39 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான மற்றும் பகுதி அளவிலான தடைகளை ட்ரம்ப் நிர்வாகம் விதித்தது.
மத்திய கிழக்கு நாடுகள்
இதனால் சட்டப்பூர்வமாக விண்ணப்பித்த ஆப்பிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோரின் விண்ணப்பங்களை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவை அமைப்பு எவ்வித முடிவும் எடுக்காமல் பல மாதங்களாக நிறுத்தி வைத்திருந்தது.

இதனை எதிர்த்து குடியேற்ற ஆதரவு அமைப்புகளும், தொழிலாளர் சங்கங்களும் ரோட் தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் மெக்கானெல், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்று கூறி அதனை இரத்து செய்தார்.
விண்ணப்பதாரர்கள் எந்தத் தவறும் செய்யாத பட்சத்தில், அவர்கள் பிறந்த நாட்டின் அடிப்படையில் பாகுபாடு காட்டி அவர்களின் வாழ்க்கையை முடக்கி வைக்க அரசுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும், குடியேற்றத்திற்கு எதிரான உள்நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்தத் தீர்ப்பு முறையான வழிகளில் குடியேறக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.