சிலிண்டரால் என்னை அடிக்கவில்லை! - இராஜாங்க அமைச்சர் மறுப்பு
கேகாலை ரஞ்வல பிரதேசத்தில் இன்று காலை பயணித்த கொண்டிருந்த போது சிலர் எரிவாயு சிலிண்டரால் தாக்கியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மறுத்துள்ளார்.
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை ரஞ்வல பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பயணித்த வாகனத்தின் மீது சிலிண்டரைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் அவ்வாறு தன் மீது தாக்குதல் நடத்தப்படவில்லையென அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கொழும்பு கண்டி பிரதான வீதியில் கேகாலை ரஞ்வல பிரதேசத்தில் உள்ள எரிவாயு சிலிண்டர் கடைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அந்த பகுதியில் நான் பயணித்த வாகனத்தின் மீது சிலர் எரிவாயு சிலிண்டரால் தாக்கியதாக இணையத்தில் பொய்யான தகவல் பரவி வருகின்றது. உண்மையில் இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அப்படி பயணிக்கும் போது எரிவாயு சிலிண்டரில் அடிபட்டிருந்தால் வாகனம் சேதமடைந்திருக்கும்.
இல்லை என்றால், குறைந்த பட்சம் ஒரு காணொளியாவது இருந்திருக்க வேண்டும்.
இந்த பொய்யான தகவலை வெளியிட்டமைக்கு எதிராக தாம் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.