இலங்கையில் ஆபத்தான நபரின் குடும்பம் தப்பியோட்டம் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்
நாட்டின் பாதாள உலக குற்றவாளிகளில் ஒருவரான கரந்தெனிய சுத்தாவின் தாய், சகோதரி மற்றும் மைத்துனர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு பேலியகொடை குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ கேப்டன் உதவி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் மைத்துனருக்கு சொந்தமான மினுவங்கொடயில் உள்ள ஒரு காணியில் புதைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கியின் மகசின்கள் மற்றும் 25 தோட்டாக்கள் கரந்தெனிய சுத்தாவின் சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது, கரந்தெனிய சுத்தாவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆயுதங்களை மறைத்து வைத்ததாக சந்தேக நபர் தெரிவித்தார்.
சந்தேக நபரான முன்னாள் கேப்டன் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு கரந்தெனிய சுத்தாவின் அறிவுறுத்தலின் பேரில் தனது தாய், மைத்துனர் மற்றும் சகோதரிக்கு கடவுச்சீட்டுகளை ஏற்பாடு செய்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரகசிய தகவல்கள்
சந்தேக நபருக்குச் சொந்தமான மற்றொரு கையடக்க தொலைபேசி பேலியகொடை குற்றப்பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த தொலைபேசியிலிருந்து பல இரகசிய தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென பொலிஸார் கூறியுள்ளளனர்..
சந்தேக நபர் நீக்கிய தகவலைக் கண்டறிய மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உதவியை நாடவுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார். பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் ரோஹன் ஒலுகலவின் வழிகாட்டுதலின் கீழ் தலைமை அதிகாரி லிண்டன் சில்வா மற்றும் பிற அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.