ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!குறைவடையாத கட்டணங்கள்:அமைச்சரை பதவி விலகுமாறு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை
எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் பேருந்து கட்டணத்தையும் குறைப்பதற்கு சாத்தியம் உள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமைச்சர் பதவி விலக வேண்டும்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில் வாகன உதிரிப்பாகங்களின் விலை மற்றும் அதற்கான சேவை கட்டணங்கள் குறைவடையாமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முடியவில்லையாயின் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும்.
குறித்த விடயம் தொடர்பில் பிரத்தியேக குழுவொன்றை நியமிக்கவோ அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவோ முடியாவிட்டால், போக்குவரத்து அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் பந்துல குணவர்தன பதவி விலகலை செய்ய வேண்டும்.
பேருந்து கட்டணத்தில் திருத்தம்
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டண திருத்தத்தை மேற்கொள்வதற்காக பரிசீலித்து வருவதாக பொறுப்பான அமைச்சு தெரிவித்துள்ளது.
பரிசீலிக்கப்பட்டு முறையாக செயல்படுத்தப்பட்டால்,எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கு சாத்தியமுள்ளது.
அத்துடன் வருடந்தோறும் ஜூன் மாதம் முதலாம் திகதி தேசிய போக்குவரத்து கொள்கைக்கு அமைய பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.”என கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
