அமெரிக்க டொலர் தொடர்பில் பொருளாதார மற்றும் நிதி சந்தை ஆய்வாளர்கள் விளக்கம்
அமெரிக்க டொலருக்கான தேவை கணிசமான அளவு அதிகரித்துள்ளமையே இன்றைய நாட்களில் டொலரின் பெறுமதி வலுவடைவதற்கு முக்கிய காரணம் என பொருளாதார மற்றும் நிதி சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 09 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 286 பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நிதியமைச்சு தளர்த்தியுள்ளது. இதன் காரணமாக குறுகிய காலத்தில் குறித்த பொருட்களின் இறக்குமதிக்கு அதிக டொலர் தேவை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார மற்றும் நிதி சந்தை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உயரும் அமெரிக்க டொலர்
மேலும் அந்த பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதுடன் அமெரிக்க டொலர் மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பும் இந்த நிலைமையை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நீண்டகாலமாக இறக்குமதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொருட்கள் நீண்ட காலத்திற்குப் பின்னர் அகற்றப்படுவதன் மூலம் அப்பொருட்களுக்கான இறக்குமதி தேவை உடனடியாக அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எப்படியிருப்பினும் ரூபாவுக்கு நிகரான டொலரின் தினசரி உயர்வு அடுத்த சில நாட்களில் மிதமானதாக இருக்கும் என பொருளாதார மற்றும் நிதி ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.