அத்தியாவசிய பொருட்களின விலை அதிகரிப்பு-இலங்கை அரசாங்கத்துக்கு மற்றும் ஒரு பொருளாதார சவால்
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் பற்றாக்குறை காரணமாக கொழும்பு துறைமுகத்தில் 1000 இற்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான கொள்கலன்கள் தேங்கியுள்ளன.
இதனால் சந்தைகளுக்கு அத்தியாவசியப்பொருட்களை விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை அனுமதிப்பதற்காக போதுமான அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறியிருந்த போதிலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இறக்குமதியாளர்கள் நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்திலிருந்து தமது சரக்குகளை அகற்றுவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அத்துடன் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய இரண்டிற்கும் பாரிய தாமதக்கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்களை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் பண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையுயர்வைக் கட்டுப்படுத்த துறைமுக வாடகையை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இல்லையெனில், விற்பனை விலையில் இதுபோன்ற செலவுகள் சேர்க்கப்படும்போது அது நுகர்வோருக்கு பெரும் சுமையாக இருக்கும் என்று .அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.