களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாதியர் போராட்டத்தால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் வைத்தியர்கள்
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள் பி.சி.ஆர், மற்றும் அன்டிஜன் பரிசோதனை செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து வைத்தியர்கள் முன்வந்து பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் அங்கு வரும் நோயாளர்களுக்கு பி.சி.ஆர், மற்றும் அன்டிஜன் பரிசோதனை செய்வதற்கு மறுப்பு தெரிவித்து வருவதையடுத்து, அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே. புவனேந்திரநாதன் அவர்களின் தலைமையில் அங்கு கடமை புரியும் வைத்தியர்கள் இன்று வியாழக்கிழமை முன்வந்து பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.புவனேந்திரநாதன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
பி.சி.ஆர் செய்வதற்கு ஆட்கள் போதாமையினால்தான் இன்று நான் முன்வந்து வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு இந்த பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுத்துள்ளேன். இப்பகுதியில் 180000 மேற்பட்ட மக்கள் வாழ்கின்றார்கள், இப்பகுதியில் எம்மாலான சேவையை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்நிலையில் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களைப் பரிசோதனை செய்து உள்ளே எடுத்தால்தான் ஏனையவர்களுக்கும் கோவிட் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும். இதனை நாம் செய்யாமல் விட்டால் எமது உத்தியோகஸ்தர்களுக்கும் ஏனைய பொதுமக்களுக்கும் கோவிட் தொற்று பரவி நிலைமை மோசமாகிவிடும்.
எமது வைத்தியசாலையில் உள்ள 18 வைத்தியர்களும், 24 மணி நேரமும் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். அத்துடன் சேர்த்து, சுழற்சிமுறையில் இந்த பரிசோதனைக் கடமையில் ஈடுபட்டு வருகின்றோம்.
இதனால் நோயாளிகளையும், ஏனைய பொதுமக்களையும் பாதுகாக்க முடியும். இதில் யாரையும் சிரமத்திற்குப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கமும் இதில் கிடையாது. வைத்தியசாலையிலுள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால்தான் மக்களுக்கு முழுமையான சேவையை வழங்க முடியும்.
அரசாங்கத்தின் உதவியுடன் எமது மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்குரிய அனைத்து சேவைகளையும் நாம் செய்து வருகின்றோம். தாதிய உத்தியோகஸ்த்தர்கள் ஏன் இந்த பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் ஈடுபடுவதைத் தவிர்த்து வருகின்றார்கள் எனக் கேட்டபோது அது தொடர்பில் அவர்களிடம்தான் கேட்கவேண்டும்.
எனினும் அவர்களைச் சாடவேண்டும் என்ற எதுவித தனிப்பட்ட உள்நோக்கமும் கிடையாது. அவர்களின் சொந்த பிரச்சனையில் நான் தலையீடு செய்யவில்லை.
இவ்வாறு பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனை செய்யவில்லை என்றால் இன்னும் கோவிட் எமது வைத்தியர்கள், மற்றும் ஏனைய உத்தியோகஸ்த்தர்கள், பொதுமக்களுக்கும் பரவியிருக்கும்.
கடந்த வாரம் இவ்வைத்தியசாலைக்கு நோயாளர்களாக
வந்தவர்களுள் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 38 பேருக்கு பொசிற்றீவ்
ஆக வந்துள்ளது. இதனை நாம் செய்யாமல் விடமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.





