மருத்துவர்கள் சங்கக் கூட்டணி அரசாங்கத்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
மருத்துவர்களின் சம்பள முரண்பாடுகள் மற்றும் நலன்புரிப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறுவது, இளம் மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் வேகத்தை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்கள் சங்கக் கூட்டணியின் தலைவர் விசேட வைத்தியர் சமல் சஞ்ஜீவ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கொடுப்பனவுகளில் உள்ள முரண்பாடுகள்
நீண்டகாலமாக நிலவும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் உள்ள முரண்பாடுகள் குறித்து எந்தவொரு நடைமுறை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மருத்துவர்களுக்கு வாழத் தேவையான ஊதியம் கிடைப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், தற்போதைய அதிக வரி கொள்கையால், மருத்துவர்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என்றும், குறிப்பாகத் தனியார் துறையில் ஈடுபடாதவர்களுக்கு இந்தச் சுமை அதிகம் என்றும் அவர் விளக்கினார்.
மேலும், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் சேவை செய்யும் பல மருத்துவர்களுக்கு அதிகாரபூர்வமான வசிப்பிட வசதிகள் இல்லாததால், அவர்கள் தங்குமிடம் மற்றும் குடும்ப நலனுக்காக தங்கள் சொந்த வருமானத்தை செலவிட வேண்டியுள்ளது என்ற விடயத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
அரசாங்கம் அழைப்பு
அரச சேவையை விட்டு வெளியேறிய மருத்துவர்களைத் திரும்பி வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்கும் அதேவேளையில், அவர்கள் திரும்புவதற்குச் சாதகமான சூழலை உருவாக்கத் தவறியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், அரசாங்கம் நிபுணர்களை நோக்கி இத்தகைய பாராபட்சமான அணுகுமுறையைப் பேணுவது புரிந்து கொள்ள முடியாதது என்று கூறி, இந்தப் பிரச்சினையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேரடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |