பரதக்கலையில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ள சுவிஸ் நாட்டின் புகழ்பூத்த ஆசிரியர்
பரதக்கலையில் கலாநிதிப் (முனைவர்) பட்டத்திற்கான கற்கை நெறியினை (Doctor of Philosophy) ஸ்ரீமதி. சந்திரவதனி சோதிநாதன் அவர்கள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இன்று நிறைவு செய்துள்ளார்.
திருக்கோணேஸ்வர நடனாலய - பேர்ண் இயக்குனரும் புலம்பெயர் தேசத்தில் பிரசித்திபெற்ற ஆசிரியரிகளில் ஒருவருமான முதுகலைமானி. சந்திரவதனி சோதிநாதன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை ஆய்வுநெறியாளர் முனைவர் இரா. மாதவி அம்மையார் அவர்களின் வழிநடத்தலிம், தமிழ்நாடு அரச இசைக்கல்லூரி முதல்வர் முனைவர் பா. சாய்ராம் ஐயா அவர்களின் முன்னிலையிலும், முதுநிலைப் பேராசிரியர் மதிப்பிற்குரிய ரகுராமன் ஐயா அவர்களின் முன்னிலையிலும் "பள்ளு இலக்கியங்களில் நாட்டிய நாடகக்கூறுகள்" (சிற்றியலக்கியங்களில் நாட்டிய நாடகக் கூறுகள்) என்னும் ஆய்வுக்கட்டுரையினை சமர்ப்பித்துள்ளார்.
பள்ளு இலக்கியங்களை நாட்டிய நாடகத்தினூடாக நோக்குதல் தொடர்பாக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த ஸ்ரீமதி. சந்திரவதனி சோதிநாதன் அவர்கள் கருத்துவிளக்க ஆய்வு, ஒப்பீட்டு ஆய்வு, மதிப்பீட்டு ஆய்வு ஆகிய படிநிலை ஆய்வு முறைகளின் ஊடாக பள்ளு இலக்கியங்களின் தோற்றம், சங்க இலக்கியங்களில் மல்லர் பாடல்கள், காப்பிய இலக்கியங்களில் மல்லர் பாடல்கள், பக்தி இலக்கியங்களில் மல்லர் பாடல்கள், இலக்கியங்களில் காணப்படும் நாடக உத்திகள், இலக்கியங்களின் தனித்தன்மை என்பன தொடர்பாக தெளிவாக வரையறுத்து விளக்கமளித்திருந்ததுடன் பள்ளு இலக்கியங்களில் காணப்படும் சில இலக்கியப் பாடல்களைத் தெரிவுசெய்து தன்னூடாகவும், தனது முதுநிலை மாணவர்கள் ஊடாகவும் நடனவடிவம் வழங்கி செய்முறை ரீதியாகவும் விளக்கமளித்திருந்தார்கள்.
தமிழ் இலக்கியங்களில் பள்ளு இலக்கியங்களை மட்டும் எல்லையாக வைத்து நல்லதொரு ஆய்வேட்டினை மிகச் சிறப்பாக ஆய்வுசெய்து ஆய்வாளர் ஸ்ரீமதி. சந்திரவதனி சோதிநாதன் அவர்கள் தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கு வழங்கியிருக்கிறார்கள் எனவும் புலம்பெயர் நாட்டில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வாளரின் முயற்சி பாராட்டுதற்குரியது எனவும் ஆய்வாளர் ஒரு சிறந்த நடனக்கலைஞர் என்பதனை அவர் வழங்கிய செய்முறைரீதியான விளக்கங்களில் இருந்து அறியமுடிகிறது எனவும், ஆய்வு மதிப்பீட்டாளர்களின் கேள்விகளிற்கும் மிகச்சிறந்த முறையில் ஆய்வாளர் பதிலளித்திருப்பதாகவும் தெரிவித்திருந்த தமிழ்நாடு அரச இசைக்கல்லூரி முதல்வர் முனைவர் பா. சாய்ராம் ஐயா அவர்கள் ஸ்ரீமதி. சந்திரவதனி சோதிநாதன் அவர்களிற்கு முனைவர் பட்டத்தினை வழங்குவதற்கு தஞ்சாவூர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பரிந்துரைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஸ்ரீமதி. சந்திரவதனி சோதிநாதன் அவர்களின் மாணவிகள் புலம்பெயர் தேசமெங்கும் நடைபெறும் போட்டி நிகழ்ச்சிகளிலும், நிகழ்வுகளிலும் பரதக்கலையினை மாண்பேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.