இந்துக்களிடத்தில் குரோதத்தை விதைக்காதீர்கள் : சிவசேனை வேண்டுகோள்
சமத்துவமான வாழ்வியலைக் கொண்டு வாழ்ந்துவரும் இந்துக்களிடத்தில் குரோதத்தை விதைக்காதீர்கள் என்று சிவசேனை அமைப்பின் இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
''மன்னார் திருக்கேதீச்சரத்தில் நடைபெறுகின்ற அட்டூழியங்கள் தொடர்பாக மன்னார் ஆஜரிடம் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றோம். திருக்கேதீச்சரத்தில் சிவராத்திரி தினத்தில் நுழைவாயில் உடைக்கப்பட்டது.
தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நேரத்திலே அங்கு மாதா சொரூபத்தினை நிறுவி இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் விரோதங்களை ஏற்படுத்த விரும்புகின்றீர்களா?
இந்துக்கள் அனைத்து தெய்வங்களையும் மதிப்பவர்கள். கிறிஸ்தவர் வீடுகளில் இந்து கடவுளின் சிலைகள் இருக்காது. ஆனால் இந்துக்களின் இல்லங்களில் ஜேசுநாதரின் சிலை வைத்திருப்பார்கள். சைவர்கள் ஜேசுநாதரை மதிப்பவர்கள். நீங்கள் மன்னாரிலே தொடர்ச்சியாக வன்முறைகளைத் தூண்டுகின்றீர்களா என்பது எமக்கு புரியவில்லை.
சமத்துவமான வாழ்வியலை கொண்டு வாழ்ந்துவரும் இந்துக்களிடத்தில் குரோதத்தை விதைக்காதீர்கள். அதேபோன்று குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலைகள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுகின்றார்கள். ஏன் இந்த திருக்கேதீச்சரம் தொடர்பாகக் கதைக்கவில்லை. ஏன் நீங்கள் கதைக்கவில்லை. சமத்துவத்தை உருவாக்குவது உங்களின் கடமையல்லவா.
இரண்டு குழுவிற்குமிடையில் குரோதத்தை வளர்த்து வாழவிரும்புகின்றீர்களா என்பது தெரியவில்லை. எதிர்வரும் நாட்களில் சிவராத்திரி தினம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
எனவே அனைத்து இந்துக்களும் உங்களது இல்லங்களில் நந்திக்கொடியினை ஏற்றி உங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள்.
வடமாகாண ஆளுநரே, மத்திய அரசே, இந்திய உயர்ஸ்தானிகரே சைவர்களுக்கு நீதி
வேண்டும். அதனைப் பெற்றுத்தாருங்கள். நாம் வன்முறையைத் தூண்டவில்லை எமக்கு நீதி
வேண்டும். ஒற்றுமையே இந்த நாட்டின் பலம்'' இவ்வாறு கூறியுள்ளார்.



