விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்! அரிசி இறக்குமதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கண்டனம்
விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
2026ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசுக்குத் தேவையான 7 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் நேற்று(21) பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
76 ஆண்டு கால விவசாயிகளின் சோகத்தைச் சுபீட்சமான நிலைக்கு மாற்றித் தருவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் ஜீவனோபாயத்தைப் பொருளாதாரப் படுகொலையாக மாற்றியுள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
அரிசி இறக்குமதி
அரசின் அமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட தரவுகளின்படி, சிவப்பு நாடு மற்றும் வெள்ளை நாடு போன்றவற்றுக்கான உற்பத்திச் செலவைக் கணக்கிடும் போது, விவசாயிகளுக்குக் கிடைக்கும் குறைந்த இலாபத்தைக் கொண்டு எவ்வாறு வாழ முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்கு உரிய கட்டுப்பாட்டு விலைகள் பிறப்பிக்கப்படாததற்குக் காரணம், அத்துறையுடன் தனவந்தர்கள் சம்பந்தப்பட்டிருப்பதே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் உண்மையான அரிசித் தேவை 2.5 மில்லியன் மெற்றிக் தொன்னாக இருக்க, 3.2 மில்லியன் மெற்றிக் தொன் உற்பத்தி செய்யப்படுகின்றது.
5 இலட்சம் மெற்றிக் தொன் மேலதிக கையிருப்பு உள்ள நிலையிலும் 3 இலட்சத்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.