இலங்கை இராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி வேண்டாம்! - இந்திய இராணுவத்திடம் கோரிக்கை
இலங்கை இராணுவத்துடன் கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதை இந்தியா இராணுவம் கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய இராணுவ தளபதி எம்.எம்.நரவனே கடந்த 13.10.2021 அன்று, இலங்கைக்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா ஆகியோரை சந்தித்து பேசிய எம்.எம்.நரவனே, இரண்டு நாட்டு உறவு குறித்தும், கடல் பாதுகாப்பு குறித்து, இராணுவ போர் இணை பயிற்சி குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும், ஆண்டுதோறும் இலங்கை இராணுவத்தை சேர்ந்த 1,000 பேருக்கு, இந்தியாவில் பயிற்சி அளிக்கவும், கூடுதலாக 50 இராணுவ அதிகாரிகளுக்குச் சிறப்பான பயிற்சி அளிக்கவும் இப்பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 2009-ல், சிங்களப் பேரினவாத அரசால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பு போரில் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குழந்தைகள் என்றும் பாராமல் ராணுவ வாகனங்கள் ஏற்றிக் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானர்கள். இப்படியான துயரங்கள் அரங்கேறி 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தமிழர்களுக்கான நீதி இன்று வரை கிடைக்கவில்லை.
ஆனாலும், நீதி கிடைத்திடும் என்ற நம்பிக்கையில் ஐ.நா வாசலில் நின்று கொண்டிருக்கிறோம். அதோடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க துணை நிற்க கோரி இந்திய அரசிடம் வேண்டி நிற்கிறோம்.
ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், இலங்கை அரசுடன் இராணுவ ஒத்துழைப்பை இந்திய அரசு மேற்கொள்வது எந்த விதத்தில் நியாயம். இலங்கை கடற்படையால் நாள்தோறும் தமிழ்நாட்டு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் அழுகுரலை எல்லாம் காது கொடுத்து கேட்காத இந்திய அரசு, சிங்கள பேரினவாத அரசுடன் நல்லுறவை பேணுவது வேதனை அளிக்கிறது.
இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு பயிற்சி அளிப்பது என்பது மிச்சம் மீதி இருக்கிற ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தாகவே முடியும்.
ஏற்கனவே, ஈழப்பகுதிகளில் மீண்டும் ஒரு எழுச்சி வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில், ஏராளமான மதுக்கடைகளை திறந்தும், விபச்சார விடுதிகளையும் திறந்தும் தமிழ் இளைஞர்களை சீரழித்து வருகிறது சிங்களப் பேரினவாத அரசு.
எனவே, போர்க்குற்றவாளியான இலங்கை அரசுடன் ஒத்துழைப்பை பேணுவதை விடுத்தும், அந்நாட்டு ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதையும் இந்திய அரசு கைவிட வேண்டும்.
மேலும், போர்க்குற்றவாளியான ராஜபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க இந்திய அரசு முன் வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
