இலங்கையின் வளங்களை விற்க அனுமதிக்க மாட்டோம்: பொதுஜன பெரமுன தொழிற்சங்க தலைவர்
இலங்கையிலே எந்தவொரு வளங்களையும் விற்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க தலைவர் அனில் நெத்தி குமார தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ரெலிகொம் வளங்கள் உட்பட பிரதான வளங்களை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தபால் தொடர்பு சேவை சங்கத்தில் ஊடக சந்திப்பு இன்று (07.02.2024) நடைபெற்றுள்ளது.
இதில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு
மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அண்மையில் இந்தியாவுக்கு சென்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
இந்த சந்திப்பை மேற்கொள்ள பிரதான காரணம் இலங்கையில் ரெலிகொம் வளங்களை விற்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கூறி பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ளவே.
இவ்வாறு வளங்களை விற்பது சேவையாளர்களை பாதிப்பதோடு நாட்டின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும்.
பல பில்லியன் வருமானம்
மேலும் பல வருட சேவை வழங்குநராக உள்ள ரெலிகொம் அமைப்பானது இலங்கை அரசாங்கத்திற்கு பல பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது.
இந்நிலையில், இலங்கை அரசாங்கமானது ரெலிகொம் மாத்திரமல்ல மின்சார சபை, தபால் சேவை, புகையிரத சேவை மற்றும் மில்கோ நிறுவனம் போன்றவற்றையும் விற்பதற்கு முயற்சித்து வருகின்றது, இவற்றிற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க தலைவர் அனில் நெத்தி குமார குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் தொழிற்சங்க பிரிவு தலைவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |