முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஆராய்வு (Photos)
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2012ம்ஆண்டு வர்த்தமானி மூலம் ஒதுக்கப்பட்ட வனப் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்ட மேலதிக அரச அதிபர் தலைமையில் இன்று கள விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று (14.01.2023) முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் தலைமையில், மாவட்ட வன வள உத்தியோகத்தர், நில அளவையாளர் மற்றும் பிரதேச செயலக காணிக்கிளை பதவி நிலை உத்தியோகத்தர்கள், உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் குறித்த பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டு வன வளத் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளனர்.
பயிர் செய்கை காணிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் குடியேறி வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கான பயிர் செய்கை காணிகள் இதுவரை இல்லாத நிலையில் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறானவர்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் கைவிடப்பட்ட வயல் நிலங்களையும் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரால் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல்
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒட்டறுத்த குளம், வன்னிவிளாங்குளம், மூன்று முறிப்பு சிராட்டிகுளம், நட்டங்கண்டல் அம்பாள் புரம் உள்ளிட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு வனவள திணைக்களத்தினால் வர்த்தமானி மூலம் ஒதுக்க காடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேற்படி பகுதிகளை பார்வையிட்டதுடன் குறித்த பகுதிகளை விடுப்பது தொடர்பில் பிரதேச செயலகத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதில் சாதகத் தன்மைகள் காணப்படுவதாகவும் பிரதேச செயலக தகவல் மூலம் அறிய முடிகின்றது.
இவ்வாறு குறித்த அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள்
விடுவிக்கப்படும்போது 570க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையும்
வாய்ப்புள்ளது.