மாகாணத் தேர்தலை இந்த அரசு அடுத்த வருடம் நடத்தவே மாட்டாது!
மாகாண சபைத் தேர்தலை அரசு அடுத்த வருடம் நடத்தப்போவதில்லை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், "அரசுக்கு இதற்கு முன்னர் ஆட்சி செய்த அனுபவம் இல்லை. என்றாலும் தேர்தல் காலத்தில் இவர்கள் மக்களுக்கு அளித்து வந்த வாக்குறுதிகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து, இவர்களுக்கு ஒரு தடவை கொடுத்துப் பார்ப்போம் என்றே மக்கள் இந்த அரசுக்கு ஆட்சி வழங்கி இருக்கின்றனர். தற்போது மக்கள் அது தொடர்பில் கைசேதப்படுகின்றனர்.
ஜனாதிபதி அடுத்த வருடத்துக்காக சமர்ப்பித்திருக்கும் வரவு - செலவு திட்டத்தில் எதிர்பார்ப்பாக்கப்படும் விடயங்களே அதிகமாக இருக்கின்றன. ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை.
வரவு - செலவுத் திட்டம்
ஏனெனில் நாடொன்றின் அபிவிருத்திக்குப் பிரதானமாக 4 விடயங்கள் தேவைப்படுகின்றன. அதாவது வருமானத்தை அதிகரிப்பது, நேரடி முதலீடு, தொழில் உருவாக்குதல் மற்றும் நவீன தொழிநுட்பம். இவற்றை மேற்கொள்ள வரவு - செலவுத் திட்டத்தில் இருக்கும் பிரேரணைகள் என்ன?

இதனை அடைந்துகொள்ளாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. கடந்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் அரசு 11 சட்டமூலங்களைச் சமர்ப்பித்திருந்தது.
அதில் ஒன்றைக்கூட நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்து நிறைவேற்றவில்லை. அதேபோன்று கடந்த வருடம் வரவு - செலவுத் திட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கிய பணத்தை இவர்களுக்குச் செலவழிக்க முடியாமல் போயிருக்கின்றது. இவை மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை நிறைவேற்றத் தவறிய குற்றத்துக்காகச் சிறைக்குச் செல்லக் கூடிய தவறாகும்.
ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவழிக்காமல் இருந்தால் எப்படி நாட்டில் அபிவிருத்தி ஏற்படும்? இவர்களுடன் வேலை செய்ய முடியாது என கடந்த ஒருவருடத்தில் 26 அதிகாரிகள் பதவியை இராஜிநாமா செய்துள்ளனர். ஒருபோதும் இவ்வாறு இடம்பெற்றதில்லை. நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தபோது ரணில் விக்கிரமசிங்க, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தார்.
அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அன்று எமது பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து உலக வங்கி பாராட்டி இருந்தது. ஆனால், உலக வங்கியின் இறுதி அறிக்கையின் பிரகாரம் நாட்டின் வறுமை நூற்றுக்கு 22வீதம். இந்த நிலை தொடர்ந்தால் வறுமை நூற்றுக்கு 32 வீதமாகலாம். 293 ரூபாவுக்கு இருந்த டொலர் தற்போது 307 ரூபா. இவ்வாறு இருக்கையில் அஸ்வெசும நிவாரணம் கேட்பவர்கள், யாசகம் கேட்பவர்களாகும் என அமைச்சர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு
இவ்வாறு தெரிவிப்பதற்கு வெட்கப்பட வேண்டும். எமது அரசில் தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு, மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு, விமான நிலையம் அமைப்பதற்கு இவர்கள் இடமளிக்கவில்லை. எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துக்கும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இன்று இவர்கள் அதனைச் செய்கின்றனர். ஜனாதிபதி முன்வைத்திருக்கும் வரவு - செலவுத் திட்டத்தைப் பார்க்கும்போது நாணய நிதியத்தின் பிரதானி முன்வைத்திருப்பதுபோல் இருக்கின்றது.
நாணய நிதியத்திடம் கடன் எடுத்ததை நாங்கள் எதிர்ப்பதில்லை. அவர்கள் உதவியதாலே இன்று நாங்கள் தலைநிமிர்ந்து இருக்கின்றோம். அதற்காக அவர்கள் தெரிவிக்கும் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்காெள்ள வேண்டும் என்றில்லை இந்த அரசு 6 மாதங்களில் விழும் என நாங்கள் தெரிவித்ததாகத் தெரிவிக்கின்றனர்.
நாங்கள் அவ்வாறு தெரிவித்தது உண்மை. அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனைக் கிழித்தெறிவதாகத் தெரிவித்தன. அதற்குப் பதிலளித்தே நாங்கள் அவ்வாறு தெரிவித்தோம். ஆனால், இவர்கள் தங்களின் கொள்கையை மாற்றிக்கொண்டு, நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அவ்வாறே பின்பற்றி வருகின்றனர்.
இவர்கள் ஆரம்பத்தில் தெரிவித்ததைச் செய்திருந்தால் இந்த அரசு 6 மாதங்களில் வீழ்ச்சியடைந்திருக்கும். அதனால் அரசு தேர்தல் ஒன்றை நடத்தினால் அரசின் நிலைமையைத் தெரிந்துகொள்ளலாம். அதனால் மாகாண சபைத் தேர்தலை அரசு அடுத்த வருடம் நடத்தப்போவதில்லை." - என்றார்.
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam