மாவட்ட - பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலர்கள் அரசாங்கத்தின் கட்டளையை ஏற்பதில்லை - பிரதியமைச்சர் எரங்க குணசேகர
மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மற்றும் கிராம அலுவலர்கள் ஆகியோர் அரசாங்கம் சொல்வது போல் செயல்படுவதில்லை. எனவே, தமது கட்சியின் இளைஞர்களை அப்பதவிகளில் அமர்த்த வேண்டும் என்று பிரதி அமைச்சர் எரங்கா குணசேகர வலியுறுத்தியுள்ளார்.
இவ்வார ஆரம்பத்தில் மகரகமவில் நடைபெற்ற சோசலிச இளைஞர் சங்கத்தின் இளைஞர் மாநாட்டு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, பிரதியமைச்சர் எரங்க குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அதிகாரத்தை வேறு யாருக்கும் கொடுப்பதற்காக நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றவில்லை, அரசாங்கத்தை நாம் கைப்பற்றியுள்ளோம். ஆனால் அரச அதிகாரத்தை இன்னும் கைப்பற்றவில்லை.
சில இடங்களில் கிராம அலுவலர்கள் நாம் சொல்வது போல் செயல்படுகிறார்களா? பிரதேச செயலாளர்கள் நாம் சொல்வது போல் செயல்படுகிறார்களா? மாவட்ட அரசாங்க அதிபர்கள் நாம் சொல்வது போல் செயல்படுகிறார்களா? இல்லை என்றே கூற வேண்டும்.
முந்தைய அரசாங்கங்கள்..
அரச எந்திரத்தின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், மற்றும் கிராம அலுவலர்கள், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் உத்தரவுகளை ஏற்று செயல்படுவதில்லை. அப்படியானால் என்ன நடக்க வேண்டும்? இங்குள்ள பெண்களும் சிறுவர்களும் அரச எந்திரத்திற்கு உள்வாங்கப்பட வேண்டும்.

சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் இளைஞர்கள் அரச எந்திரத்தில் உள்வாங்கப்பட வேண்டும். இலங்கையில் முதன்முறையாக, உச்சாணியில் கைவைக்கப்பட்டுள்ளது. எல்லோரும் கவலைப்படுகிறார்கள்.
அவர்கள் இப்படி நடக்கும் என்று கனவிலும் கூட ஒருபோதும் நினைத்ததில்லை. ரணிலும் அவரது கும்பலும் தோற்கடிக்கப்பட்டார்கள், ஆனால் அவர்கள் அழிக்கப்படவில்லை.
சஜித்தும் அவரது கும்பலும் தோற்கடிக்கப்பட்டார்கள், ஆனால் அவர்கள் அழிக்கப்படவில்லை. நாமலும் அவரது கும்பலும் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள் அழிக்கப்படவில்லை.
அழிக்கப்படாதவர்கள் இப்போது எல்லா இடங்களிலும் நடனமாடத் தொடங்கியுள்ளனர். நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் அவர்களை அரசியல் ரீதியாக அழிக்க வேண்டும் என்றும் பிரதியமைச்சர் எரங்க குணசேகர அதன்போது தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.