மன்னாரில் கடற்றொழில் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்
மன்னார் மாவட்ட கடற்றொழில் சமூகம் எதிர்நோக்கும் சமூக பொருளாதார மற்றும் ஒருங்கிணைந்த உரிமைக்காய் எங்கள் குரல்' எனும் தொனிப்பொருளில் கருத்து பகிர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது மன்னார் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நேற்று (26) காலை முதல் மாலை வரை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மானிய திட்டம்
குறிப்பாக இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் வருகையை அதிகரித்துள்ள நிலையில் இதனால் இலங்கை கடற்றொழிலாளர்கள் பாரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை கடற்றொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற இழுவை மடி தொழில் காரணமாகவும் கடற்றொழிலாளர்கள் பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மானிய திட்டம் உரிய முறையில் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித் துள்ளனர்.
பல்வேறு கூட்டங்களில் குறித்த விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டுள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்றொழிலாளர்களுக்கு கடலில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.ஆனால் அந்த அனர்த்தங்களுக்கு கூட எவ்வித இழப்பீடுகளும் உரிய முறையில் கிடைப்பதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோரிக்கை
மேலும், கடற்றொழிலாளர்கள் முழுமையாக பாதிக்கப்படுகின்ற காலப்பகுதியில் அவர்களுக்கு உதவித்திட்டங்கள் கூட உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே அவ்வாறான காலப்பகுதியில் கடற்றொழில் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
வட கடலில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறல்கள் அதிகரித்துள்ள நிலையில் அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.
எனினும் தென் கடலில் வருகின்ற இந்திய கடற்றொழிலாளர்கள் கண்டும் காணாமலும் விடப்படுவதாக கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும் இந்திய கடற்றெழிலாளர்களின் அத்து மீறிய வருகைக்கு எதிராக வடக்கில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் அவர்கள் அத்து மீறிய வருகை அதிகரித்துள்ளதாகவும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



