முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான பயிர் செய்கைக்கான நீர் வழங்கல் தொடர்பில் கலந்துரையாடல்
முல்லைத்தீவு (Mullaitivu) தண்ணிமுறிப்பு குளத்தின் கீழுள்ள சிறுபோக பயிர் செய்கைக்கான நீர் வழங்கலில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் நேற்று (07.05.2024) குமுழமுனை கமநலசேவை நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் 2700 ஏக்கர் சிறுபோக செய்கை இவ்வருடம் மேற்கொள்ளப்பட்டிக்கின்றது. அத்தோடு கழிவுநீரில் கிட்டதட்ட 1000 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு விடயங்கள்
எனினும், இந்த வருடம் தீர்மானிக்கப்பட்டதனை விட அதிகமாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதனால் தற்போது குளத்திலுள்ள தண்ணீர் போதாமலுள்ளது.
மழை இல்லாத நிலையில் அதற்கு மாறாக வெப்பமான காலநிலையே நிலவி வருகின்றது. இதனால் குளங்கள், வாய்க்கால்களிலுள்ள நீர் ஆவியாகின்றது.
இந்நிலையில், நீரை வீண்விரயமாக்காது சிக்கனப்படுத்தி பயிர் நிலங்களுக்கு பாய்ச்சுவதனாலே சிறந்த அறுவடையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பயிர் செய்கைக்கு தேவையான தண்ணீரை பகிர்ந்தளிக்கும் விதம், எவ்வாறு நீரைச் சேமிப்பது தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போது பயிர் செய்யப்பட்ட அனைத்து நிலங்களுக்கும் வழமையாக நீர் பாய்வது போல் பாய விடுமாறும் அதற்கு தாங்களே பொறுப்பு என விவசாயிகள் கூறியதனையடுத்து கலந்துரையாடலை அதிகாரிகள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
மேலும் கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன
பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன், முத்தையன்கட்டு பிரிவு நீர்ப்பாசன
பொறியியலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கமநல சேவை திணைக்களத்தின் உதவி ஆணையாளர், விவசாயிகள்,
அபிவிருத்தி உத்தியோகத்தர், தொழிநுட்ப உத்தியோகத்தர் என பலரும் கலந்து
கொண்டுள்ளனர்.