வடக்கு - கிழக்கு உள்ளூராட்சி தலைவர்களுடன் கொழும்பில் உயர் கலந்துரையாடல்: சந்தன அபயரத்ன அறிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, அந்தச் சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொழும்புக்கு அழைத்து விசேட கலந்துரையாடலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(23.10.2026) இடம்பெற்ற அமர்வின்போது, நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைகளின் நிர்வாக பிரச்சினை
உள்ளூராட்சி சபைகள் வெறும் குப்பைகளை அகற்றும் நிறுவனங்களாக மட்டுமே இயங்குவதைத் தவிர்த்து, அவை எதிர்கொள்ளும் அடிப்படை நிதியியல் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் நிறைவேற்றப்படும் துணைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாகாண சபைகளின் அனுமதி பெறுவதில் உள்ள தாமதங்கள் மற்றும் 500 முதல் 1000 ரூபா போன்ற மிகக் குறைந்த அபராதத் தொகைகள் மூலம் போதிய வருமானம் ஈட்ட முடியாமை போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழியர்களின் சம்பளத்தைக் கொடுத்த பின்னர் சபைகளிடம் அபிவிருத்திப் பணிகளுக்கான நிதி இருப்பதில்லை என்றும், எனவே வடக்கு, கிழக்கின் மாவட்ட ரீதியிலான உள்ளூராட்சிப் பிரதிநிதிகளைக் கொழும்புக்கு அழைத்து அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் குறித்த எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசதரப்பு கொடுத்த பதில்
நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பதிலளித்த அமைச்சர் சந்தன அபயரத்ன, உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என உறுதியளித்துள்ளார்.

இதற்கமைய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றத் தலைவர்களை விரைவில் கொழும்புக்கு அழைத்து விரிவான பேச்சுகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.