குளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகளைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள குளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகளைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடல், திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, குளங்கள் என்பது வெறும் நீர்நிலைகள் மட்டுமல்ல, அவை விவசாயம், உணவுப் பாதுகாப்பு, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயிகளின் நீர்ப்பாசன உரிமைகளின் முதுகெலும்பாகக் கருதப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை
இந்தக் கலந்துரையாடலில், குளங்களை அவற்றின் உண்மையான கொள்ளளவிற்கு ஏற்ப புனரமைத்தல், தற்போதுள்ள ஆக்கிரமிப்புகளை அடையாளம் காணுதல், முறையான நீர்ப்பாசன அணுகலை மீளமைத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், குளங்கள், கால்வாய்கள், பாதுகாப்பு வலயங்கள் மற்றும் நீர்ப்பாசனத்துடன் தொடர்புடைய பொது நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' (Zero Tolerance) கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குளங்களைப் பாதுகாப்பது என்பது விவசாயிகளைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் உணவு உற்பத்தியை வலுப்படுத்துவதும், கிராமப்புற சமூகங்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதுமாகும்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவாக, பொது வளங்களைப் பாதுகாப்பதற்கும், விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், அத்தியாவசிய நீர்ப்பாசன மற்றும் விவசாய அமைப்புகளுக்கு சேதம் விளைவிக்காமல் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கும் தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேச்சந்திரா, நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம் ஹேமந்த குமார, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ.ஸ்ரீபதி, பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இலங்கை தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி லண்டன் நகரில் அமைதிப் போராட்டம்