இலங்கையர்களுக்கு ரஷ்யாவில் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்பு
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் (SLFEA) இணைந்து, ரஷ்ய கூட்டமைப்பில் முதல் முறையாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை ஆரம்பித்துள்ளது.
இந்த முயற்சியின் கீழ், 58 ஆடை தொழிலாளர்களை கொண்ட முதல் குழு இம்மாத ஆரம்பத்தில் ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோட் பகுதியில் அமைந்துள்ள இரண்டு புகழ்பெற்ற ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த 58 ஆடை தொழிலாளர்களை இடைநிலை முகமைகளின் ஈடுபாடு இன்றி ஆட்சேர்ப்பு செய்வதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு தூதரகம் மேற்படி நிறுவன உரிமையாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிக வேலை வாய்ப்பு
இதற்கமைய இலங்கையில் உள்ள திறமையான 700க்கும் அதிகமான ஆடை தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு நிஸ்னி நோவ்கோரோடில் உள்ள பிராந்திய அரசாங்கம் இலங்கை தூதரக அதிகாரிகளுடன் முற்போக்கான முறையில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளன.
மேலும், தூதரகம் தொடர்புடைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் அங்கீகாரம் பெற்ற பிற நாடுகளில் உள்ள இலங்கையின் திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல தொழில்நுட்ப வகைகளின் கீழ் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பொறிமுறையை வகுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.