உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் போர் - இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நேரடி பாதிப்புகள்
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். அவர்களின் தங்கள் சுற்றுலா காலத்தை நிறைவு செய்து நாடு திரும்ப முடியாத நிலையில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஹோட்டல்களில் தங்கியுள்ள அவர்கள், தமது அறைகளை விட்டு வெளியேறுவதாக, உனவட்டுன சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் சங்கத்தின் தலைவர் ரூபசேன கொஸ்வத்த தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான நிலையில், நாடு திரும்ப முடியாத உக்ரேனிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நடவடிக்கை எடுக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாட்டுக்கும் இடையில் யுத்தம் நீடிக்குமாயின் இலங்கையின் சுற்றுலாத்துறையில் அது தாக்கம் செலுத்தும் என தலைவர் கூறியுள்ளார்.
தற்போதைய சுற்றுலாப் பருவத்தில் ஏராளமான ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்களின் வருகை சுற்றுலாத் துறைக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. உனவட்டுன சுற்றுலா வலயம் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வருவாய் அதிகரித்தது. அவர்களின் பொருளாதாரம் வலுப்பெற்றது.
இதுபோன்ற பிரச்சினை ஏற்படும் போது, சுற்றுலா சபை அல்லது சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனங்களிடம் என்ன செய்வதென்று உரிய திட்டமில்லை. போரில் எல்லாம் தலைகீழாக மாறியது. சுற்றுலா பயணிகளின் முன்பதிவு இரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தற்போது இலவச உணவு வழங்கி வருகிறோம்.
உனவட்டுன மக்கள் அனைவரும் அவர்களுக்கு இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும் அதனை தினமும் செய்ய முடியாது. இந்தச் சூழல் நமது நாட்டின் சுற்றுலாத் தொழிலில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என உனவட்டுன சுற்றுலா துறை சங்கத்தின் செயலாளர் சுமித உபேசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்யாவின் நடவடிக்கை இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் தேயிலை ஏற்றுமதிக்கும் எரிபொருள் இறக்குமதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என, என வெளிவிவகார அமைச்சின் செயலாளா அட்மிரல் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு மேலும் அதிக தொகையை இலங்கை செலுத்த வேண்டிய நிலையேற்படலாம்.
உக்ரைன் நெருக்கடியால் எரிபொருள் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில் இலங்கைக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு மேலும் டொலர்கள் தேவைப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.