கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டர் - வெளியான தகவல்
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமைக்கான மூல காரணத்தை வெளிக்கொணர இரகசிய பொலிஸ் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பலவீனமடையவில்லை எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பான விசாரணை
கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் சாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை 175 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
இதற்கமைய, குறைந்தபட்சம் 14 வழக்கு பொருட்கள் மற்றும் மாதிரிகள் பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.