தினேஷ் ஷாப்டர் மரணத்தில் தொடர் மர்மம்! மயாணத்திலிருந்து தப்பிச்சென்ற உயர்ந்த மனிதர்
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக இருந்த தினேஷ் ஷாப்டர், பொரளையில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இவ்வாறு, மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் காரின் அருகே நின்ற மெலிந்த, உயரமான நபர் தொடர்பில் மயான ஊழியர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தினேஷ் ஷாப்டர் மரணத்தில் தொடர் மர்மம்
குறித்த பேன்ட் மற்றும் சட்டை அணிந்திருந்த உயர்ந்த நபரை பார்த்தால் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் மயானத் தொழிலாளி கூறியுள்ளார்.
இதற்கமைய, அந்த நபரை அடையாளம் காண்பதன் மூலம் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான பல தகவல்களை வெளிப்படுத்த முடியும் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், தினேஷ் ஷாப்டர் கொலைச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தினேஷ் ஷாப்டரின் மர்மக்கொலையின் விசாரணையில் பாதுகாப்பு கமரா காட்சிகள் மிக முக்கிய ஆதாரமாக மாறியுள்ளதுடன்,பாதுகாப்பு கமரா காட்சிகளில் சந்தேகத்திற்கிடமான சில செயற்பாடுகள் பதிவாகியுள்ளமை தொடர்பில் சந்தேகம் காணப்படுவதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், விஞ்ஞான ரீதியான ஆதாரங்களைப் பெற்று சந்தேகத்தை நிவர்த்தி செய்ய உத்தேசித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.



