புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழர்களின் பெருமைகளை கொண்டாடும் தென்னிலங்கை மக்கள்
பிரித்தானியாவில் சாதனை படைத்த ஈழத்தமிழ் இளைஞன் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் பல தகவல் வெளியிட்டுள்ளன.
தமிழர்களுக்கு எதிராக இனவாத சித்தாந்தங்களை தென்னிலங்கை மக்கள் மத்தியில் விதைக்கும், சிங்கள ஊடகங்கள் கூட அவர்களை பெருமைப்படுத்தி முன்னிலையாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற மிகப்பெரிய சமையல் போட்டியில் மாஸ்டர்செஃப் செம்பியன் 2024 என்ற மதிப்புமிக்க பட்டத்தை ஈழத்தமிழ் இளைஞன் வென்றுள்ளார்.
பிரின் பிரதாபன்
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியை சேர்ந்தவரும் பிரித்தானிய குடியுரிமை பெற்றவருமான பிரின் பிரதாபன் இந்த பட்டத்தை பெற்றுள்ளார்.
கால்நடை அறுவை சிகிச்சை நிபுணராக செயற்படும் பிரின் பிரதாபன் பிபிசி தொலைக்காட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய சமையல் போட்டியில் வென்றுள்ளார்.
பிரான்ஸில் கடந்த வருடம் நடைபெற்ற சிறப்புமிக்க பாண் தயாரிப்பில் வவுனியாவை சேர்ந்த தர்ஷன் செல்வராஜா என்பர் முதலிடம் பெற்றிருந்தார்.
இதன்மூலம் பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையான எலிசேக்கு ஒரு வருடத்திற்கான உணவு வழங்கும் வாய்ப்பினையும் பெற்றிருந்தார்.
தர்ஷன் செல்வராஜா
இந்நிலையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தர்ஷனுக்கு சிங்களவர்களும் மகத்தான வரவேற்பினை வழங்கியிருந்தனர்.
பல சிங்கள ஊடகங்கள் செவ்வி கண்டதுடன், ஹோட்டல் துறையில் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கும் நல்ல வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
புலம்பெயர் நாடுகளில் இலங்கையை சேர்ந்த பல தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதனையாளராக உள்ளதாக பல தென்னிலங்கைவாசிகள் சமூக வலைத்தளங்களில் பதவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.