போராட்டங்கள் நடத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை - நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்
தாயகத்தில் மக்கள் போராட்டங்கள் நடத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது என்பதை புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் வாசுகி சுதாகர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் காலத்தில் தொழில் வாய்ப்பினை இழந்த மக்களுக்கான நிவாரண உதவி வழங்கும் நிகழ்வுகள் இன்று நடைபெற்றிருந்த நிலையில் இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தினை பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டம் இறுதிப் போரில் மிக அழிவுகளை சந்தித்துக் காணாமல் ஆக்கப்பட்டவர் மற்றும் உறவுகளை இழந்த வலிகளுடன் தங்கள் வாழ்க்கைத்தரத்தினை கொண்டு செல்ல முடியாத நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் போரிற்குப் பின்னர் கோவிட் இடர் இன்னும் மோசமான நிலைக்கு மக்களைத் தள்ளியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிப் போராடிக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என்ற செய்தி மிகவும் கவலை கொள்ளவைக்கின்றது.
கோவிட் இடர் காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவர்களுக்கான அச்சுறுத்தல்கள் அரச பயங்கரவாதம் வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. போராட்டங்களை முன்னின்று நடத்துவதற்குக் கூட பயமுற்ற நிலையில் இருக்கின்றார்கள்.
புலம்பெயர் தமிழர்கள் இதனை விளங்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் எதுவும் அற்ற நிலையில் போராட்டங்களைச் செய்யமுடியாமல் இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலியினை கூட நடத்த முடியாமல் இருக்கின்றோம்.
போராட்டங்கள் நடத்த முடியாத துப்பாக்கிய நிலை இங்கு இருக்கின்றது என்பதைப் புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கான உதவிகளையும் போராட்டத்தின் மூலம் வலுசேர்க்கக்கூடிய உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.