உலக அமைதிக்காக உரையாடல் வழி: போர்த்துக்கலில் நடந்த கூட்டு அமர்வு
உலக அமைதி, புரிந்துணர்வு மற்றும் மதங்களுக்கிடையேயான ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்குடன் செயல்படும் 'King Abdullah Bin Abdulaziz International Centre for Interreligious and Intercultural Dialogue (KAICIID)' தனது கூட்டு அமர்வை 15.10.2025 அன்று போர்த்துக்கல் தலைநகர் லிசாபொன்ன் நகரில் நடத்தியுள்ளது.
இந்த அமர்வில் சவூதி அரேபியா, ஆஸ்திரியா, ஸ்பெயின் மற்றும் வத்திக்கான் (Holy See) ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
அதே நேரத்தில், KAICIID இயக்குநர் குழு (Board of Directors) உலகின் முக்கிய மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம், சைவ (இந்து) மற்றும் புத்தமதம் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்டடுள்ளது.
ஒருங்கிணைந்த நோக்கம்
இந்த வாரியத்தில் சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், சைவ-இந்துமதத்தின் பிரதிநிதியாக இயக்குநர்களில் ஒருவராக பங்கேற்றார்.
உரையாடல் — நம்பிக்கையின் பாலம் அமர்வைத் தொடங்கி வைத்த KAICIID செயல் பொதுச் செயலாளர் தூதர் அல்மெய்டா ரிபெய்ரோ, நடுவத்தின் நிர்வாக அமைப்புகளுக்கும் செயலாளர் குழுவுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
“நேரில் சந்திப்பது நம்பிக்கையையும் தகவல் பரிமாற்றத்தையும் வலுப்படுத்துகிறது. ஆண்டு முழுவதும் KAICIID-ன் செயல்பாடுகளை வழிநடத்துவதில் நிர்வாக அமைப்புகள் வகிக்கும் பங்கு மிக முக்கியமானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்கு உறுப்பினர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார். அமைதி மற்றும் இணை வாழ்வுக்கான ஒருங்கிணைந்த நோக்கம் இந்த கூட்டு அமர்வில் KAICIIDஇன் தனித்துவமான இரட்டை நிர்வாக முறைமை (Dual Governance Model) சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த முறைமை அரசியல் தலைவர்களையும் மதத் தலைவர்களையும் ஒரே தளத்தில் இணைத்து, உலகளாவிய அமைதிக்கான கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கின்றது.
நிலையான உலக அமைதி
இந்நிகழ்வில் பங்கேற்ற சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் மற்றும் சைவநெறிக்கூடம் இளையோர் மன்ற செயற்பாட்டாளர் திருநிறை லாவண்யா இலட்சுமணன், உலக அரசியல் மற்றும் சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடி, சைவத் தமிழர்கள் புலத்திலும் தாயகத்திலும் எதிர்கொள்ளும் சவால்களை விளக்கியுள்ளனர்.
அவர்கள், பரஸ்பர புரிதல், அமைதியான இணை வாழ்வு மற்றும் நிலையான உலக அமைதி ஆகியவற்றை உரையாடல் வழியாக மேம்படுத்தும் பணியில் தமிழ்மக்களும் செயற்பட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
எதிர்கால நோக்கங்கள் KAICIID உலகம் முழுவதும் மதங்களுக்கிடையேயான மற்றும் கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடலை ஊக்குவித்து, மனிதநேயம் மற்றும் அமைதி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றது.
இது விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பு நடுவத்தின் (United Nations’ Observer Status) பார்வையாளர் நிலை பெறும் நோக்கில் பணிபுரிய உள்ளது.
இந்த முயற்சி உலகளவில் அமைதிக்கும் புரிந்துணர்வுக்கும் அடிப்படையாக அமைய வேண்டும் என்பதோடு, தமிழ்மக்களுக்கு நற்பலன் அளிக்குமாறு அமைய வேண்டும் எனும் வேண்டுகோளை, சைவநெறிக்கூடத்தின் சார்பில் நிகழ்வில் பங்கேற்ற மதத் தலைவர்களுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் சைவநெறிக்கூடத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










