டயகம - போடைஸ் - ஹட்டன் பிரதான வீதி மீண்டும் திறப்பு - மக்களின் ஒற்றுமையால் போக்குவரத்து வழமைக்கு
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் கடும் மழையால் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகளும் கற்பாறை சரிவுகளும் பதிவாகி வருகின்றன.
அந்த வகையில், டயகம - போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பிரதான வீதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததால் கடந்த 3ஆம் திகதி முதல் இவ்வீதியின் ஊடான அனைத்து போக்குவரத்தும் முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அன்றாடம் இவ்வீதியை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், மாணவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், நீண்ட மாற்றுப் பாதைகளை பயன்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, நேற்று (05) அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவியின் தலைமையிலும், அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரஞ்சன பண்டாரவின் ஒருங்கிணைப்பிலும், வீதியை மீளத் திறப்பதற்கான அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த பணிகளுக்கு ஆக்ரா கல் குவாரியின் உரிமையாளர் சின்னத்தம்பி முழுமையான ஒத்துழைப்பையும் இயந்திர வசதிகளையும் வழங்கியதுடன், பிரதேச மக்கள், சமூக நலன் விரும்பிகள், வாகன சாரதிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள், அல்பியன் தோட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல தரப்பினரும் ஒன்றிணைந்து பாரிய அளவிலான சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.
வீதியின் குறுக்கே விழுந்திருந்த மிகப்பெரிய கற்பாறைகள் சாதாரண முறையில் அகற்ற முடியாத அளவுக்கு இருந்ததால், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வெடிபொருட்கள் பயன்படுத்தி அவை உடைக்கப்பட்டு அகற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வீதி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீரமைக்கப்பட்டது. இதன் மூலம் இன்று முதல் டயகம–போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பிரதான வீதியின் ஊடாக அனைத்து வகையான வாகனங்களும் வழமைபோல் பயணிக்கத் தொடங்கியுள்ளன. நீண்ட நாட்களாக போக்குவரத்து தடை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் இதனால் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
வீதியை மிகக் குறுகிய காலத்திற்குள் மீளத் திறப்பதற்காக தன்னலமின்றி ஒத்துழைப்பு வழங்கிய அக்கரப்பத்தனை பிரதேச சபை, பொலிஸார், ஆக்ரா கல் குவாரி நிர்வாகம், அல்பியன் தோட்ட நிர்வாகம், வாகன சாரதிகள், பஸ் உரிமையாளர்கள் மற்றும் பிரதேச மக்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தொடர்ந்தும் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு அபாயம் முழுமையாக நீங்கவில்லை என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே, இவ்வீதியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும், மழைக்கால பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


