ஆன்மீக குரு ஆச்சார்ய தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம்
இந்தியாவின் பிரபல ஆன்மீகத் தலைவரான ஆச்சார்ய தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா - சீதாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்திற்கு சென்று தனது குழுவினருடன் இணைந்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிகழ்வு நேற்று(19.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட வழிபாடுகள்
ஆலயத்திற்கு வருகை தந்த ஆன்மீகத் தலைவரை, சீதையம்மன் ஆலயத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து மிகச் சிறப்பான முறையில் வரவேற்றனர்.

அதன் பின்னர், இராமாயணத்தில் சீதை சிறை வைக்கப்பட்ட இடமாகக் கருதப்படும் அசோக வனத்திலுள்ள சீதையம்மன் ஆலயத்தின் ஆற்றுக்கு அருகிலுள்ள ஹனுமானின் கால் தடங்களையும் ஆன்மீக குரு ஆச்சார்ய தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி வணங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவுகளையும் நடத்தியுள்ளார்.
அத்துடன், ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்றதுடன், வருகை தந்திருந்த அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.
ஆச்சார்ய தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி அவர்களுக்கு சீதையம்மன் ஆலயத்தின் விசேட சால்வை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை (Ramayana Trail) ஊக்குவிக்கும் விசேட வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாகவே இந்த ஆன்மீகத் தலைவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இவர் இறம்பொடை ஸ்ரீ பக்த ஹனுமார் ஆலயத்திற்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னரே,வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளார்.
