எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் போராட்டங்களை தொடர்வோம் - அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கண்டனம்
எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் எதிர்ப்பு போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையத்தின் இணைத் தலைவர் லோ.தீபாகரன் தெரிவித்துள்ளார்.
இன்று (30.08.2026) மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கவனயீர்ப்பு போராட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு பூராகவும் கிட்டத்தட்ட 1,20,000 க்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றார்கள். அவர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாடு பூராகவும் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த போராட்டமானது எதிர்வரும் 31ஆம் திகதி சரியாக 12 மணி அளவில் நாடு பூராகவும் தங்கள் கடமை புரியும் அலுவலகங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த உள்ளார்கள்.
இந்த போராட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாக அரச மற்றும் மாகாண அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்ததாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.

இந்த போராட்டத்தில் எமது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளாக சம்பள உயர்வு பிரச்சினை, முறையான சேவைப்பிரமாணக் குறிப்பு இல்லாமை உட்பட பல அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைக்க உள்ளோம்.
அன்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்களே! அதிகரித்த வாழ்க்கைச் செலவில் இருந்து நாம் விடுபடுவதற்காகவும், இந்த கால ஓட்டத்திற்கு ஏற்ப எமது வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் சந்தோஷமானதாகவும் வாழ்வதற்காகவும் நாம் இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
எனவே அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இந்த போராட்டத்திற்கு தங்களது நேரத்தை ஒதுக்கி ஆதரவு தருமாறு எமது தொழிற்சங்கம் சார்பாக உங்களை கேட்டுக்கொள்கின்றோம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழர் பகுதியில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் குதித்த மக்கள் - அரசாங்கத்திடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை