சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள்.. வவுனியாவில் போராட்டத்தில் குதித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது, நேற்று(23.11.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி தீர்வுக்கோரி போராட்டம்
வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உத்தியோகத்தர்கள், தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது, அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் நியாயமான சம்பள அளவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், விசேட தரத்துடன் கூடிய முறையான பதவி உயர்வுத் திட்டத்தை வழங்குதல் மற்றும் தற்போதைய வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவை உடனடியாக வழங்குதல் ஆகிய பிரதான கோரிக்கைகள் போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டுள்ன.
நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள தமது தொழில்சார் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






