போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் விபரங்களை சேகரித்த பொலிஸார்
சிவிலுடையில் வருகைதந்த பொலிஸார் தமது விபரங்களைப் பதிவுசெய்ததுடன், தமது போராட்டத்திற்கு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக மட்டக்களப்பில் நீதி கோரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேசத்திடம் நீதி கோரி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 13வது நாளாகவும் இன்றும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் 13வது நாளாகவும் இன்றும் நடைபெற்று வருகின்றது. அங்கு அவர்கள் கூறுகையில், வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு உள்ளக ரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கப்போவதில்லையெனவும், சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்தப்பட்டு தமக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கச் சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
மிகுந்த மனவேதனையுடன் தமது உறவுகளைத் தேடிப் போராடிவரும் பெற்றோர்களை இன்னும் வேதனைக்குட்படுத்தும் செயற்பாடுகளை பொலிஸார் கைவிடவேண்டும் எனவும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.




