உயிர் அச்சுறுத்தலால் பாதுகாப்பு கோரும் தேசபந்து
தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் (Deshbandhu Tennakoon) பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்று (01) பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால்...
பதவி சார்ந்த கடமைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உயிருக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் கஞ்சிபானி இம்ரானிடமிருந்து அச்சுறுத்தல் காணப்படுவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இவ்வாறான சூழலில் தனது பாதுகாப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தகுந்த பாதுகாப்பை வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருந்தபோது அவருக்கு பாதுகாப்பு வழங்கிய அதிகாரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோனின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க பொலிஸாரினால் பாதுகாப்பு மதிப்பாய்வு நடவடிக்கையொன்று முன்னெடுக்கவுள்ளதாகவும், அதன் ஊடாக அவருக்குப் பாதுகாப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டால், பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
