கோட்டாபயவின் அரசாங்கத்துக்கு முதல் பரீட்சைக் களமாக மாறும் நாடாளுமன்றம்
புதிய பிரதி சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக நாடாளுமன்றம் புதன்கிழமை கூடும் போது, அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு முக்கியமான சோதனையாக போகிறது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் தாம் பிரதி சபாநாயகராக கடமையாற்றப் போவதில்லை என்றும் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதே நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலின் முதலாவது விடயமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அடங்கிய மற்றொரு குழுவுடன் நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக அமர்ந்தவுடன் , சியாமபலப்பிட்டிய தனது பதவி விலகலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சமர்ப்பித்தார்.
ஜனாதிபதி ராஜபக்ச, இந்த பதவி விலகலை ஏற்க மறுத்து, துணை சபாநாயகர் பதவியில் தொடர வலியுறுத்தினார்.
எனினும் ஏப்ரல் 30ம் திகதிக்கு பின்னர், தாம் துணை சபாநாயகராக செயல்படபோவதில்லை என்று அவர் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
வழமையான நாடாளுமன்ற நடைமுறையின்படி, புதிய துணை சபாநாயகரை சபை ஒருமனதாக தேர்ந்தெடுக்கலாம்.
இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டால், துணை சபாநாயகர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்தநிலையில் பிரதி சபாநாயகர் பதவிக்கான பெயர்களை முன்மொழிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேராவின் பெயரை முன்மொழிய அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அத்துடன் அந்தப் பதவிக்காக நடத்தப்படும் எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
தமது தரப்பிலிருந்து யாரை இந்தப் பதவிக்கு முன்மொழிவது என்பது தொடர்பில் பல்வேறு எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சியுடன் அமர்ந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்தார்.



