கச்சத்தீவு விவகாரம்: இந்திய அரசிடமிருந்து கோரிக்கைகள் வரவில்லை - பிரதி அமைச்சர் விளக்கம்
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயம் செய்த போதே, ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, அவர் இவ்வாறு விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது பேசுபொருளாகியுள்ள கச்சத்தீவு விவகாரம் குறித்து, கிண்ணியாவில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
கச்சத்தீவு விவகாரம்
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர்,
கச்சத்தீவு என்பது முறையான இருதரப்பு ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்ட ஒரு பகுதி என்பதை வலியுறுத்தினார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்திய அரசாங்கம் இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. இந்தியாவில் தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் ஒரு பிரசாரமாகவே இதனைப் பார்க்கிறோம்.
எனவே, இது குறித்து நாம் தேவையற்ற வகையில் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. 1974 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது.
பின்னர் 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன.
இராஜதந்திர பேச்சுவார்த்தை நடத்த தயார்
இந்த ஒப்பந்தங்களின்படி, இந்திய கடற்றொழிலாளர்கள் கச்சத்தீவில் வலைகளை உலர்த்துவதற்கும், புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதற்கான உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் போது கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், தேர்தல் காலங்களில் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கிறது.
எதிர்காலத்தில் இந்திய அரசு இது தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகளை முன்வைத்தால், இராஜதந்திர ரீதியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகப் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த விவகாரத்தை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்காத வகையில் கையாள வேண்டும் என்பதே தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.