மன்னார் மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு: அரசாங்க அதிபர் மக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை (VIDEO)
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று புதன்கிழமை(8) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது சுகாதாரத் துறையினர், பொலிஸ், இராணுவம், பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகரித்துக் காணப்படுகிற சூழ் நிலையில், தற்போது டெங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நாளைய தினம்(9) தொடக்கம் எதிர்வரும் புதன்கிழமை (15) வரை மன்னார் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்துகின்றோம்.
பிரதேசச் செயலகம், உள்ளூராட்சி மன்றங்கள், பாதுகாப்புத் துறையினர், சுகாதார திணைக்களம் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து, குறிப்பாக டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பனங்கட்டுகொட்டு, எமில் நகர்,பெரிய கடை,பேசாலை 5,8 ஆம் வட்டாரம், தோட்டவெளி போன்ற கிராமங்கள் உயர் ஆபத்துள்ள இடங்களாகச் சுகாதாரத் துறையினர் அடையாளப்படுத்தி உள்ளனர்.
குறித்த இடங்களில் எதிர் வரும் ஒரு வாரங்களுக்கு சிரமதானம் மேற்கொள்ளப்பட உள்ளதோடு, அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குக் குழுவினர் சென்று வீடுகள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு டெங்கு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சகல சமூக மட்ட அமைப்புக்களும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
தற்போது சுகாதார திணைக்களம் வழங்கியுள்ள தகவல்களுக்கு அமைவாக 25 தொடக்கம் 49 வயதிற்குப்பட்டவர்களே அதிகம் டெங்கு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் தொழிலுக்குச் செல்லும் வயதுடையவர்களாக இருக்கின்றமையினாலும், டெங்கு
நோயானது வயது குறைந்தவர்களைத் தாக்கக்கூடியது என்பதனாலும் மக்கள் மிகவும்
விழிப்புடனும், அவதானத்துடனும் செயல்படுமாறு உரிய திணைக்களங்கள் வழங்குகின்ற
ஆலோசனைகளுக்கு அமைவாகக் கட்டுப்பட்டு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.



