மனித உரிமை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணிகள்! (Video)
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் (10.12.2022) நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் பேரணிகள், ஆர்ப்பாட்டப் பேரணிகள் மற்றும் துண்டுப் பிரசுர விநியோகங்களும் இடம்பெற்றுள்ளது.
மன்னார்
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வானது நேற்று (10.12.2022) காலை 10 மணியளவில் மன்னார் வலயக்கல்வி பணிமனை முன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரத்தை சுற்றி, பின் பிரதான வீதியூடாக முருங்கன், நானாட்டான் பேருந்துதரிப்பு நிலையங்களை சென்றடைந்து வங்காலை ஊடாக மீண்டும் மன்னாரை வந்தடைந்துள்ளது.
இதன்போது 'எங்கள் உரிமையே எங்கள் சுதந்திரம்' 'பேச்சு சுதந்திரம் கல்விக்கான உரிமை, மற்றும் சமூக பாதுகாப்புக்கான உரிமை' 'உலகில் உள்ள யாவருக்கும் உரிமைகள் சமமே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மனித உரிமைகள் தொடர்பாக எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி: ஆசிக்
வவுனியா
கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர் எங்கே..? எனத் தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் நேற்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்ட பேரணியானது பஜார் வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியினை அடைந்து, வைத்தியசாலை சுற்றுவட்டத்தின் ஊடாக ஏ9 வீதிக்கு சென்று வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை வந்தடைந்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் 'மனித உரிமை மீறப்பட்ட நாட்டில் மனித உரிமை தினம் எதற்கு, மனித உரிமை தினம் எமக்கு எதிர்ப்பு தினம், மனித உரிமை மதிக்கப்படாத நாட்டில் மனித உரிமை நிறுவனம் எதற்கு, தமிழர்களின் உரிமைகளை மறுக்காதே, கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர் எங்கே' என பல்வேறு கோசகங்களை எழுப்பியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
யுத்த கால மனித உரிமை மீறல்களைப் வெளிப்படுத்தும் புகைப்படங்கள், கறுப்புக்கொடிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் ஆகியவற்றினை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்
இதேவேளை, மனிதவுரிமைகள் தினமும், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு 16 நாள் செயற்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வும் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று (10.12.2022) வவுனியா உதவி பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி சஜீவனின் வழிகாட்டலில், வவுனியா பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுபாஷினி சிவதர்சன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
செய்தி: திலீபன்
மட்டக்களப்பு
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மட்டக்களப்பில் நேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு - கல்லடிப் பாலத்துக்கு அருகில் இருந்து ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நிறைவு பெற்றுள்ளது.
இதில், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தப் பேரணியில் கலந்துகொண்டோர் அரசுக்கு எதிராகப் பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன், பதாதைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேரணின் இறுதியில் மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் கோஷங்களை எழுப்பியவாறு ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு - திருகோணமலை இணைப்பாளரிடம் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.
செய்தி: குமார், ராகேஷ்














பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
