மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபையில் ஆர்ப்பாட்டமொன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் சிலர் செயற்படுவதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையில் ஆரம்பமான ஆர்ப்பாட்டமானது பேரணியாகக் காந்தி பூங்கா வரையில் சென்று மீண்டும் மட்டக்களப்பு மாநகரசபை வரையில் வந்துள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் வாயில் கதவுகளை மறித்து குப்பை சேகரிக்கும் வாகனங்களை வீதியில் நிறுத்தி மட்டக்களப்பு மாநகரசபையின் ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகரசபையின் முதல்வரே எமது தலைவர், உங்கள் வீட்டு வேலைகளை செய்வதற்கு எங்களை பயன்படுத்த வேண்டாம், அரசாங்கத்தில் கடமை செய்யும் உறுப்பினரே கடமையினை துஷ்பிரயோகம் செய்யாதே, ஊழியர்களை கேவலமாக நினைக்காதீர்கள், ஊழியர்களை அதிகாரம் செய்யும் உரிமை உங்களுக்கு கிடையாது போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியிருந்ததுடன், மாநகர முதல்வருக்கு எதிரான கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.
மாநகரசபையின் முதல்வர் மாநகரசபை ஊழியர்களை கீழ்த்தரமான ஊழியர்கள் என்று கூறி தங்களை அவமானப்படுத்தியுள்ளதுடன், சில உறுப்பினர்கள் மாநகர ஆணையாளரை மோசமான முறையில் விமர்சித்து வருவதாகவும் அவர்கள் மாநகர ஆணையாளரிடமும், மாநகர ஊழியர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாநகரசபையானது ஆணையாளர் வருகைதந்த பிறகு சிறந்த முறையில் செயற்படுவதாகவும் அவற்றினை குழப்பும் வகையில் மாநகரசபையின் முதல்வர் உட்பட உறுப்பினர்கள் செயற்படுவதாகவும் இங்கு ஊழியர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் பல வருடங்களாகத் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வரும் நிலையில் தங்களை நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்வதற்கு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் சில மாநகரசபை உறுப்பினர்கள் தங்களை இடைநிறுத்தப் போவதாக அச்சுறுத்துவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜர் ஒன்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மா.தயாபரனிடம் வழங்கப்பட்டுள்ளது.
மாநகர ஆணையாளரிடமும் மாநகர ஊழியர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் எனவும், அதுவரை தமது போராட்டம் தொடரும் எனவும் ஊழியர்கள் தெரிவித்த போதிலும் மக்களின் சேவைக்கு இடையூறு செய்யாமல் போராட்டத்தினை முடித்துக் கொள்ளுமாறு மாநகர ஆணையாளர் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக போராட்டம் கைவிடப்பட்டு மாநகரசபை செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


















யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
