எங்களையும் உயிருடன் விடுவிக்க வழிவகுங்கள்! சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை
எங்களையும் உயிருடன் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என சந்தேகநபர்களாக 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2006 ஆகஸ்ட் 14ஆம் திகதி, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீது நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு, 16ஆண்டுகளாக விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளை, 'நிரபராதிகள்' எனத் தெரிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களை (10.11.2023) அன்று விடுதலை செய்துள்ளது.
அதாவது, குறித்த வழக்கில், மாத்தளையை சேர்ந்த குடும்பஸ்தரான சுப்பிரமணியம் சுரேந்திரராஜா சார்பில், சட்டத்தரணிகள் திரு.தணுக்க நந்தஸ்ரீ, S.அனுஷாங்கன் மன்றில் முன்னிலையாகி, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படையில் துன்புறுத்திப் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தனது வாதாட்டத்தின் மூலம் வலுவிழக்கச் செய்திருந்தார்.
அதேவேளை, முல்லைத்தீவைச் சேர்ந்த கனகரத்தினம் ஆதித்தனுக்கு ஆதரவாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜாவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யோகராஜா நிரோஜன் சார்பில், முன்னால் நீதிபதியான சிரேஷ்ட சட்டத்தரணி கனகா சிவபாதசுந்தரம் அவர்களும் முன்னின்று வழக்கினை திறம்பட நெறிப்படுத்தியுள்ளனர்.
கோரிக்கை
ஒரு சந்தேகநபரை 'நிரபராதி' என நிரூபிப்பதற்கு எமது நாட்டில் 15ஆண்டுகள் எடுத்துள்ளதென்பது உண்மையில் கவலைதரும் விடயமே. இருப்பினும், மிகநீண்டகாலங்களாக துன்பங்களை மாத்திரமே அனுபவித்துவந்த இவர்கள் விடுதலைபெற்று அவர்தம் குடும்பங்களுடன் இணைந்துள்ளமை பெருமகிழ்ச்சியை தருகிறது.
இவர்கள் விடுதலையாகி வருகின்றபோது, அங்கு சிறையில் மீதமிருக்கும் எமது உறவுகள், "எங்களையும் உயிருடன் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்!" எனக்கூறி விழிகலங்க வழியனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன், 15முதல் 28ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகள் 10பேரையும், ஜனாதிபதி பொதுமன்னிப்பளித்து விடுவித்து அவர்களது எஞ்சியுள்ள வாழும் காலத்தையேனும் மெய்யுறுதி செய்ய அவர்களை உயிர்ப்புடன் விடுவிக்க வேண்டுமென, ஒரு மனிதநேய அமைப்பாக நாம் வினயமுடன் கோரிக்கை விடுக்கிறோம்.
எவ்வாறாயினும், கடந்த பல வருடங்களாக தமிழ் அரசியல் கைதிகளின் பொது நன்மைக்கென்று குரலுயர்த்தி வருகின்ற 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பானது, மீதமுள்ள 14தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலை வாழ்வு மெய்ப்படும் வரையில், நடைமுறைக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் தளர்வுறாது செயற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.