களஞ்சியசாலைகளில் தேங்கிய நிலையில் தேங்காய்கள்: வர்த்தகர்கள் வைக்கும் கோரிக்கை
எரிபொருள் நெருக்கடி காரணமாக களஞ்சியசாலைகளில் மில்லியன்கணக்கான தேங்காய்கள் விற்பனை செய்து கொள்ள முடியாத நிலையில் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான தேங்காய்களே இவ்வாறு விற்பனை செய்து கொள்ள முடியாமல் கிடங்குகளில் தேங்கிக் கிடக்கின்றன.
மாதக்கணக்கில்
சுமார் 17 இலட்சம் தேங்காய்கள் களஞ்சியசாலைகளில் முளைவிடத் தொடங்கியுள்ளதன் காரணமாக அவற்றை வீசியெறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஹொரக்கலை, மாரணவில, தெங்கு முக்கோண வலயம் ஆகிய இடங்களில் உள்ள களஞ்சியசாலைகளில் கையிருப்பில் உள்ள தேங்காய்களை ஒரு மாதத்துக்கும் மேலாக விற்பனை செய்ய முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கு வர்த்தகர்கள் களஞ்சியசாலைகளுக்கு வருவதில்லை.
இந்த நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு தேங்காய் கொள்வனவு செய்ய வரும் வர்த்தகர்களுக்கு டீசலை ஓரளவு வழங்குமாறு கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள மாகமகே, கால்நடை வளத்துறை மற்றும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.