தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தாய்மார்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டமையை கண்டித்து நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் ஆயுதப்படைகளாலும் துணை இராணுவக் குழுக்களாலும் பல ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் இனவழிப்பு யுத்தத்தின் முடிவில் இலங்கை ஆயுதப்படைகளிடம் சரணடைந்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதியையும் பொறுப்புக் கூறலையும் எதிர்பார்த்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகப் போராடி வருகின்றார்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் இலங்கையில் நடைபெறப்போவதில்லை என்பதனால் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்றினூடாக இந்த குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்காக இலங்கையைச் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மூலமாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினுடாகவோ விசாரிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
இத்தகைய பின்னணியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்குக் காரணமான அரசின் அப்போதைய ஜனாதிபதி (தற்போதைய பிரதமர்) கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகைதந்தார்.
அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கடந்த 2022.03.20ஆம் திகதியன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் ஜனநாயக வழியில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போராட்டத்திற்காகச் சென்றிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களைச் சேர்ந்த வயது முதிர்ந்த தாய்மார்கள் மற்றும் பெண்கள் மீது இலங்கை பொலிஸார் மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்தி, அவர்களில் சிலரது ஆடைகள் கிழிக்கப்பட்டதுடன், காயப்படுத்தப்பட்டுமிருந்தனர்.
ஜனநாயக ரீதியாகப் போராடிவரும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மீது இலங்கை பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டித்திருந்தது.
அதேவேளை, இலங்கை பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தைக் கண்டித்தும், நீதி வேண்டிப் போராடும் உறவினர்களின் நியாயமான கோரிக்கைகளை வலுப்படுத்தும் வகையிலும் எதிர்வரும் 2022.04.03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்துள்ள கண்டனப் பேரணிக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவை வழங்குகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் நீதிக்காகப் போராட வேண்டியது ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தினது பொறுப்பாகும்.
அக்கடமையினை உணர்ந்தவர்களாக
அன்றைய தினம், யாழ்.பேருந்து நிலையத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கும்
கண்டனப் பேரணியில் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் கலந்துகொண்டு மேற்படி
போராட்டத்துக்கு வலுசேர்க்குமாறு அழைத்து நிற்கின்றோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam