கிழக்கில் விசேட ஆசிரியர்களுக்கான தேவை 800க்கு அதிகமாகவுள்ளது - நகுலேஸ்வரி புள்ளநாயகம் (Video)
கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்தவரையில் விசேட பாட ஆசிரியர்களுக்கான தேவை தற்போதைய காலத்தில் 800க்கும் அதிகமாகவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் (Nakuleswari Pullanayakam) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
சாதனைகள் ஒவ்வொரு மட்டத்திலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பது பிரதானமாகயிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் பட்டதாரி பயிலுனர்கள் 3033 பேர் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.
எங்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற பட்டதாரிகளில் அதிகளவானோர் கலைப்பட்டதாரிகளாகவுள்ளனர். இவர்களில் சுமார் 140 பேர் மாத்திரமே கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பாடங்களை கற்றவர்களாகவுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் விசேட பாட ஆசிரியர்களுக்கான தேவை தற்போதைய காலத்தில் 800க்கும் அதிகமாகவுள்ளது. இன்று பல வலயங்கள் பாட ரீதியான ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு மத்தியிலேயே கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றது.
சில வலயங்களில் அனைத்து பாடங்களுக்கான ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்ததாகவும் உள்ளன. மட்டக்களப்பு மேற்கு, கல்குடா போன்ற வலயங்கள் ஆசிரியர் பற்றாக்குறையுடன் இயங்கிவருகின்றது.
மட்டக்களப்பு வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் ஓரளவு ஆசிரியர் தேவையினை பூர்த்தி செய்துகொண்டு கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு வலயமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் இதயமாகவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஆளுமைகளை உருவாக்குவற்கு இந்த வலயம் முன்னின்று செயற்பட வேண்டிய தேவையிருக்கின்றது.
இந்த வலயமானது முன்மாதிரியாகவும், ஏனைய வலயங்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கவேண்டிய தேவையுள்ளது.
இந்த இக்கட்டான காலப்பகுதியில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை எந்தவித எதிர்பார்ப்புமின்றி எதிர்கால தலைவர்களுக்காக செயற்பட வேண்டியவர்களாகயிருக்கின்றோம். இந்த இக்கட்டான சவால் நிறைந்த காலப்பகுதியில் கடமைகளை ஆசிரியர்கள் சிறப்பாக செய்துவருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம், சிறப்பு அதிதியாக டெலிகொம் நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிரதிப்பொது முகாமையாளர் பொறியியலாளர் வை.கோபிநாத் மற்றும் பிரபல எழுத்தாளரும் இலக்கியவாதியுமான எஸ்.எச்.எம்.அஸ்ரப் ஆகியோர்
கலந்துகொண்டர்.





