திகணை வன்முறைகள் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிட தாமதம்
கண்டி, திகணையில் நடைபெற்ற இனவன்முறைகள் தொடர்பான விசாரணை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்று ஊடகவியலாளர் முசாதிக் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் முஸ்லிம்களை இலக்கு வைத்து பாரிய இனவன்முறையொன்று கட்டவிழ்த்து விடப்பட்டது.
குறித்த இனவன்முறை காரணமாக உயிரிழப்புகள், சொத்து சேதங்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான இழப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருந்தது.
ஆணைக்குழு தாமதம்
இந்நிலையில், குறித்த இனவன்முறை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அது தொடர்பான அறிக்கையை இதுவரை வெளியி்டவில்லை.
வன்முறை நடைபெற்று ஆறு வருடங்கள் கழிந்த நிலையிலும், சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் பல்வேறு தடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலும் குறித்த அறிக்கையை வெளியிடுவதில் மனித உரிமைகள் ஆணைக்குழு தாமதம் காட்டிக் கொண்டுள்ளது.
கண்டியைச் சேர்ந்த ஊடகவியலாளர் முசாதிக், இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஆறுவருடங்களாக வெளியிடப்படாத குறித்த அறிக்கையை புதிய அரசாங்கத்தின் காலத்திலாவது வெளியிடுமாறு அவர் மனித உரிமைகள் ஆணைக்குழவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |