தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம்
தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே, இரு சிறுவர்களின் உயிரைப் பறித்த இச்சம்பவம் குறித்துத் தாம் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று தனது 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (11) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், வீட்டிலிருந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதல் நடத்துவதற்காகச் சந்தேகநபர்கள் வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி நேற்று பாதுக்கை, பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட போதிலும், சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதனிடையே, இந்த குண்டுத்தாக்குதல் இலக்கு மாறி நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தாக்குதலில் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், உயிரிழந்த சிறுவர்களின் தந்தையுடைய சகோதரரின் வீட்டை இலக்கு வைத்தே குற்றவாளிகள் வந்துள்ளதாகவும், வீடு மாறியதாலேயே இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் சடலங்களும் இன்று (12) பிற்பகல் அவர்களின் உறவினர் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டதாக 'அட தெரண' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.