முல்லைத்தீவில் அழிக்கப்படும் தேக்கம் காடுகள்: அருகி வரும் வேலியோர தாவர நடுகை (Photos)
முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் உள்ள 11ம் கட்டை தேக்கம் காடு வெட்டி முழுமையாக அழிக்கப்பட்டு வருகின்றது.
வெட்டப்படும் தேக்க மரங்களிலிருந்து பெறப்படும் குற்றிகள் (தண்டுத் துண்டங்கள்) ஒட்டுசுட்டானில் உள்ள மரக்கூட்டுத் தாபனத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் களிக்காட்டு விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
புளியங்கும் முல்லைத்தீவு வீதியில் (B296) 11 ம் கட்டை என்ற இடத்தில் இந்த தேக்கம் காடு உள்ளது. நீராவியடிச் சந்திக்கும் கோடாலிக்கல்லுக்கும் இடையில் வீதியில் ஒருபக்கம் வயல்வெளிகளும் அவற்றுக்கு எதிர்ப்புறமாக பெரும்காட்டின் வீதியோரப் பகுதியில் 11ம் கட்டை தேக்கம் காடும் அமைந்துள்ளது.
தேக்கு அறுவடை நடைபெறுகின்றது
புளியங்குளம் வீதியில் ஒரு கிலோமீற்றர் நீளம் வரையில் நீண்டு பரந்துள்ள இந்த தேக்கம் காட்டில் இப்போது தேக்கு அறுவடைக் காலம் என துறைசார் அறிஞர் ஒருவர் குறிப்பிட்டார். தேக்கம் கன்றுகள் இரண்டு மீற்றர் இடைவெளி அளவில் நாட்டப்படும்.
அவை நன்றாக வளர்ந்து வரும். விசேட பராமரிப்புக்கள் தேவையற்ற தாவரமாக தேக்கு அமைகின்றது. குறிப்பிட்ட கால வளர்ச்சியின் பின்னர் தேக்கு மரத்தின் தண்டு பருமனதிகரிப்புக்காக இடையகற்றல் செய்யப்படும்.
11ம் கட்டை தேக்கம் காட்டில் உள்ள மரங்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளவை. அவற்றை வெட்டி வெட்டும் மரங்களாக பயன்படுத்த முடியும். மீள்வனமாக்கல் காடுகள் எல்லாம் பயிர்ச்செய்கை போன்று திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனால் அவற்றை உரிய வளர்ச்சியின் பின்னர் வெட்டி பயன்படுத்துவதும் மீளவும் அந்த நிலத்தில் பயிரிடுவதும் இயல்பான ஒரு செயற்பாடே ஆகும்.
காட்டில் உள்ள தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு ஒட்டுசுட்டான் அரச மர விற்பனை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இந்த தேக்குமரக்குற்றிகளை தேவையுடையோர் கொள்வனவு செய்து கொள்ள முடியும் என அவர் தொடர்ந்து விளக்கியிருந்தார்.
மீளவும் தேக்கம் கன்றுகள் பயிரிடப்படும்
காட்டில் உள்ள தேக்கு மரங்கள் வெட்டி அகற்றப்படுவதோடு அந்த நிலம் மீளவும் தேக்கம் கன்றுகளை நடுவதற்காக தூய்மையாக்கப்படும். புதிய தேக்கம் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.
தொடர்ந்தும் இந்த நிலம் தேக்கம் காடுகளை மீள்வனமாக்கலை மேற்கொள்ளவே பயன்படும் என மீள்வனமாக்கல் செயற்றிட்டத்தோடு தொடர்புடைய அதிகாரியொருவர் வழமையான அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.
புளியங்குளம் முல்லைத்தீவு வீதியில் (B296) களிக்காட்டு தேக்கம் காடும் இவ்வாறு தேக்கு மர அறுவடை முடித்து மீளவும் புதிய தேக்கம் கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வீதிக்கு இருபுறங்களிலும் தேக்கு பயிரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மதவாசிங்கன் குளச் சந்திக்கு எதிர்ப் புறத்திலும் களிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு பின்னுள்ள இடத்திலும் தேக்கு மீள்வனமாக்கல் மேற் கொள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம்.
A9 வீதியுடன் முல்லைத்தீவு புளியங்கும் வீதி இணையும் சந்தியில் இருந்து தண்ணீரூற்று நோக்கிய திசையில் இரண்டு கிலோமீற்றர் தூரத்திலும் தேக்கம் கன்றுகள் நடப்பட்டு தேக்கு மீள்வனமாக்கல் நடைபெற்றுள்ளதை அவதானிக்கலாம்.
புளியங்கும் முல்லைத்தீவு வீதியில் 11 ம் கட்டை தேக்கம் காடு போல் மேலும் மூன்று தேக்கம் காடுகள் இருப்பதும் அவற்றில் இருந்து தேக்கு மரக்குற்றிகளை வெட்டி அகற்றிய பின்னர் புதிய கன்றுகளை நாட்டியுள்ளமையையும் மீள்வனமாக்கல் செயற்பாட்டை ஒருங்கிணைக்கும் களப்பணியில் ஈடுபட்ட துறைசார் அதிகாரியொருவருடன் இது பற்றி பேசிய போது சுட்டிக்காட்டியிருந்தமையும் நோக்கத்தக்கது.
தேக்கு பயிரிட்டு பயன் பெறலாம்
மாவட்ட வனவள பிரிவு அலுவலகங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களைப் பெற்று தெளிவடைய முடியும் என எடுத்துரைக்கப்பட்டதோடு பொது மக்களுக்கு தேவையான மரக் கன்றுகளையும் பெறமுடியும் என பயனடைந்த ஒருவரால் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தங்கள் காணிகளில் தேக்கம் கன்றுகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயிரிடுவதால் வெட்டு மரங்களை பெற முடிவதோடு விறகுகளையும் பெற முடியும் என தேக்கு பயிரிடுதலின் அனுகூலங்கள் பற்றியும் மரக்காலை உரிமையாளர் ஒருவர் தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் வன்னியில் அதிகமான பொதுமக்களின் காணிகளில் வேலியோர தாவரமாக தேக்கு நடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எனினும் இப்போது வேலியோர தாவரங்களாக இருந்த பனை, தேக்கு மரங்களை நடுவது அருகி வருகின்றது.
சீமெந்து மதில்களாலும் சீமெந்து தூண் தகர வேலிகளாலும் அவை பிரதியிடப்படுவதாக பெரியவரொருவர் தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டமையையும் இங்கே நோக்கல் பொருத்தமானதாக அமையும்.

பயங்கரவாத தடைச் சட்ட கைது விவகாரம்: ஆச்சரியம் அடைந்த ஜனாதிபதி- சாணக்கியன் வெளிப்படுத்திய தகவல் (Video)



