கோட்டாபயவிற்கு எதிராக கருத்து வெளியிட்ட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்
மிரிஹானவில் இடம்பெற்ற மோதலில் தீவிரவாதிகள் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மறுத்துள்ளார்.
தீவிரவாதிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக நான் நினைக்கவில்லை என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வன்முறை குழுக்கள் எதுவும் நுழைந்து வன்முறையில் செயலில் ஈடுபட்டிருக்கலாம். எனினும் தீவிரவாதிகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென்பது எங்களுக்கு தெரியும். அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில் மக்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உரிமைகள் உள்ளது. ஜனநாயக ரீதியாகவும், அரசியலமைப்பிலும் அதற்கான உரிமைகள் உள்ளது. எனினும் வன்முறை செய்வதற்கு அனுமதியில்லை.
பொது சொத்துக்களை சேதப்படுத்தல், பொலிஸாரை தாக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை. கற் தாக்குதல் மேற்கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீடு பொதுமக்களால் நேற்று முற்றுகையிடப்பட்டது. இது அரபு வசந்தத்தை விரும்பும் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று காலை அறிக்கை விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.