பிரித்தானியாவில் குறைந்து வரும் கொரோனா பரவல்! பேராசிரியர் ஒருவர் வெளியிட்ட தகவல்
பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவும் வீதம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் நீல் பெர்குசன் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் ஏற்பட்டும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் 1,564 பேர் உயிரிழந்தனர்.இது ஒரே நாளில் பதிவாக அதிகளவான உயிரிழப்பாகும்.
இதனையடுத்து மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 84,767 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், முடக்கல்நிலை சில விளைவுகளின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்குகின்றன" என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார், பிரித்தானியாவில் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
உணவு ஷாப்பிங், உடற்பயிற்சி அல்லது வேலை போன்ற வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் இது போன்ற நடவடிக்கைகள் அமுலில் உள்ளன.
இந்நிலையிலேயே, பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவும் வீதம் குறைந்து வருவதாக பேராசிரியர் நீல் பெர்குசன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
"குறிப்பாக லண்டனிலும், இங்கிலாந்தின் தென்கிழக்கு மற்றும் கிழக்கில் உள்ள சில பகுதிகளிலும் இதனை அவதானிக்க முடிகின்றது. இது எல்லா இடங்களிலும் காணப்படவில்லை.
எவ்வாறாயினும், ஒட்டுமொத்தமாக ஒரு தேசிய மட்டத்தில் நாம் வளர்ச்சி விகிதத்தை மெதுவாகக் காண்கிறோம். மேலும் மொத்த இறப்பு எண்ணிக்கை 100,000க்கும் அதிகமாக இருக்கும்" என்று அவர் எச்சரித்தார்.