நாட்டில் அதிகார பரவலாக்க முறையை உருவாக்க வேண்டும்: எம்.எம். ஹரீஸ்
நாட்டில் அதிகார பரவலாக்க முறையை உருவாக்க வேண்டும் எனவும் அதில் முக்கிய மூன்று பதவிகளில் நாம் அமர வேண்டும் எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனையில் நேற்று(26) இடம்பெற்ற இளைஞர்கள் சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காலம் எமக்கு சாதகமாக அமைந்திருக்கும் போது விதண்டாவாதம் பேசிக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்பதனால் காலத்தை கவனத்தில் கொண்டு துரிதமாக இயங்க ஆரம்பித்துள்ளோம்.
விமர்சனங்களுக்கு பயந்து கோழைத்தனமாக ஒதுங்க முடியாது. வரலாற்றில் எப்போதும் இல்லாதவகையில் ஒரு நல்ல நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
கடந்த ஏப்ரல் மாத போராட்டத்தின் பின்னர் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிறுபான்மை மக்கள் தொடர்பில் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் தமிழ்,முஸ்லிம் சமூகம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவ வேண்டும். அதற்காக மத்தியிலும் அதிகார பரவலாக்க முறையை உருவாக்க வேண்டும்.
தற்போது அமைச்சர் பதவியென்பது கணக்கில்லா நிலைக்கு வந்துவிட்டது. சமூகத்தின் அதிகாரம் ஓங்க முதல் மூன்று இடங்களுக்குள் நாம் அமர வேண்டும்.
மேலும், சடலங்களாக பற்றியெரிந்த போது அந்த குடும்பங்கள் அடைந்த வலியை எமது பிரமுகர்கள் உள்ளார்ந்தமாக உணர்ந்திருக்கவில்லை. அதிலிருந்து சமூகத்தை காப்பாற்ற நாங்கள் ரஷ்யாவின் புடினிடமோ அல்லது அமெரிக்காவின் ஜோ பைடனிடமோ தீர்வை கோர முடியாது.
அதற்கான தீர்வை தரும் அதிகாரம் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபயவிடமே அன்று இருந்தது. அதனால் தான் சமூகத்தின் எதிர்ப்புகளுக்கு பயந்து கோழைத்தனமாக ஒதுங்கியிராமல் துணிந்து எங்களை பலிகொடுத்து அந்த நாட்களை வெற்றி கொண்டோம்.
புதிய ஜனாதிபதி நியமனம்
புதிய ஜனாதிபதியாக ரணில் தெரிவானவுடன் அவரிடம் எங்களின் சொந்த சலுகைகள் தொடர்பில் நாங்கள் பேசவில்லை. சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வையே முன்வைத்தோம்.
அதில் முக்கியமாக தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களை பற்றி எடுத்துரைத்தோம், கடற்தொழிலாளர்கள், விவசாயிகளின் பிரச்சினைகள், காணி பிரச்சினைகள், நிர்வாக எல்லை பிரச்சினைகளை பற்றி பேசினோம். இது போன்ற பல நூற்றுக்கணக்கான பிரச்சினைகளை பேசியுள்ளோம்.
நாங்கள் முன்வைத்த பிரச்சினைகளை தீர்த்து கொடுக்குமாறு குறித்த அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
முஸ்லிம் அமைப்புக்களின் தடைநீக்கம்
அதில் இப்போது தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் தடைநீக்க நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் எரிபொருள் பிரச்சினைக்கான தீர்வு கிட்டவுள்ளது.
இந்நிலையில் சம்பந்தன் வடக்கு, கிழக்கை இணைத்து அதில் முஸ்லிம் முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என கூறியிருந்தார். அது சம்பந்தனின் எண்ணம். அது நிரந்தர தீர்வல்ல, நிரந்தர தீர்வு இப்போது இருப்பது போன்று தனித்தனியாக இருப்பதாகும்” என தெரிவித்துள்ளார்.